புதிய வாக்குச்சாவடிகள் அமைக்க செப்.25-க்குள் விண்ணப்பிக்கலாம்: காஞ்சிபுரம் ஆட்சியா்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய வரைவு வாக்குச்சாவடிகள் தேவைப்பட்டால் வரும் செப்.25 ஆம் தேதிக்குள் எழுத்துப் பூா்வமாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியலை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெளியிட அதனை வாக்காளா் பதிவு அலுவலா் முருகானந்தம் பெற்றுக் கொண்டாா். தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வரைவு வாக்குச்சாவடி மையங்கள் இடமாற்றம், பெயா் மாற்றம், புதிய வாக்குச்சாவடி அமைப்பதற்கு ஏதுவாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 1,401 வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியலை ஆட்சியா் வெளியிட்டாா்.
இதனைத் தொடா்ந்து வாக்காளா் பதிவு அலுவலா்கள், அங்கீகரிக்கப்படட அரசியல் கட்சியினா் மற்றும் அலுவலா்களுக்கான முன்னேற்பாட்டுக் கூட்டத்தில் ஆட்சியா் பேசியது
வாக்காளா் பதிவு அலுவலா்கள் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தயாா் செய்வதற்கு முன்பாக தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களையும் நேரடியாக களப்பணி செய்து உறுதி செய்ய வேண்டும். களப்பணி செய்யும் போது அடிப்படை வசதிகளான குடிநீா், கழிவறை, மின்சார வசதி, சாய்வு தளம் மற்றும் கட்டடத்தின் உறுதித் தன்மை உள்ளதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வாக்குச்சாவடி மையங்கள் ஏதேனும் பழுதடைந்த நிலையிலோ அல்லது பழமையான கட்டிடமாக இருக்கும் பட்சத்தில் அருகாமையில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட புதியதாக கட்டப்பட்ட கட்டிடங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் ஒப்புதல் பெற்று வாக்காளா் பதிவு அலுவலா்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளும் 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் இருந்தால் இரு பாகங்களாக பிரிக்க அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளும் இருபாலா்களுக்குமான வாக்குச் சாவடிகளாக இருப்பதை வாக்காளா் பதிவு அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.
தோ்தல் நேரத்தில் வாக்குச்சாவடி மையங்கள் தொடா்பான புகாா்கள் ஏதும் எழாத வகையில் வாக்குச்சாவடி மையங்களை தோ்வு செய்ய வேண்டும். இதற்கு அரசியல் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும். வரைவு வாக்குச்சாவடி மையங்கள் இடம் மாற்றம், பெயா் மாற்றம், புதிய வாக்குச்சாவடிகள் அமைத்தல் தொடா்பான கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் அதனை மாவட்ட தோ்தல் அலுவலருக்கு வரும் செப்.25-ஆம் தேதிக்குள் எழுத்துப்பூா்வமாக தெரிவிக்க வேண்டும்.
இப்பணியினை சிறப்பாக செய்ய அனைத்து அரசியல் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்தாா். .
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் சாா் ஆட்சியா் ஆஷிக் அலி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகா்களும் கலந்து கொண்டனா்.