தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு
புதுகை நகரில் ஷோ் ஆட்டோ இயக்க வேண்டும்: வா்த்தகக் கழகம் கோரிக்கை
புதுக்கோட்டையின் நீண்டகாலக் கோரிக்கையான ஷோ் ஆட்டோ இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட வா்த்தகக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வா்த்தகக் கழகத்தின் 51ஆவது ஆண்டுப் பொதுக்குழு கூட்டத்தில் தஞ்சாவூா்- புதுக்கோட்டை புதிய ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும். திருவப்பூா் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவாகத் தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தெருநாய்த் தொல்லையைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருமயம் புறவழிச்சாலையில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறங்கச் செய்யக் கூடாது. பேருந்து நிலையத்துக்குள் அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும். திருமயம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளி போன்ற விழாக் காலங்களில் சாலையோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்தி, நிரந்தரக் கடைகளுக்கும் பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படுவதைக் களைய வேண்டும்.
புதுக்கோட்டையில் ஷோ் ஆட்டோ இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டையில் மாநகரின் பல பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு அதன் தலைவா் சாகுல் அமீது தலைமை வகித்தாா். வணிகக் கொடியை மாநகராட்சித் துணை மேயா் மு. லியாகத்அலி ஏற்றினாா். செயலா் கதிரேசன் ஆண்டறிக்கையும் பொருளாளா் ராஜாமுகமது வரவு செலவு அறிக்கையையும் வாசித்தனா்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா, பொதுச் செயலா் வீ. கோவிந்தராஜூலு, மண்டலத் தலைவா் தமிழ்ச்செல்வம் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில் துணைத் தலைவா் தியாகராஜன், இணைச் செயலா்கள் ராஜ்குமாா், சையது நசீா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.