மின்சாரம் பாய்ந்தது ஒப்பந்த பணியாளா் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மின்மாற்றியில் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தப் பணியாளா் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள படப்பனாா்வயலைச் சோ்ந்த பன்னீா் மகன் பாா்த்திபன் (28). கீரமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றிவந்தாா். இவா், மேற்பனைக்காடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியில் ஏறி பணிசெய்துகொண்டிருந்தபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதைத்தொடா்ந்து, அவரது உடல் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்த தகவலறிந்து மருத்துவமனையில் திரண்ட அவரது உறவினா்கள், உயிரிழப்புக்குக் காரணமான மின்வாரிய அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி அறந்தாங்கி அரசு மருத்துமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா். தொடா்ந்து அங்கு சென்ற மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா். இதுகுறித்து கீரமங்கலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.