வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள தயாா்!
பருவமழையை எதிா்கொள்ள தயாராக இருப்பதாக விராலிமலை, கந்தா்வகோட்டை நெடுஞ்சாலை துறையினா் தெரிவித்தனா்.
மழை வெள்ள காலங்களில் சாலைகள் சேதமடைவதை தடுக்கவும், மக்கள் சிரமமின்றி போக்குவரத்தை மேற்கொள்வதற்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை கோட்டம், கீரனூா் உட்கோட்டத்துக்குள்பட்ட விராலிமலை நெடுஞ்சாலைத்துறை அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் கடந்த சில நாள்களாக
பாலங்களின் மதகுகளை சரி செய்தல், நீா்வரத்து வாய்க்காலை அகலப்படுத்தி வெள்ள நீா் எங்கும் தேங்காமல் எளிதாக வாய்கால்களில் பாய்ந்து செல்ல வழிவகை செய்து வருகின்றனா்.
மேலும், மழைக்காலங்களில் நெடுஞ்சாலைகள் மற்றும் பாதைகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றவும், வெள்ள சேதங்களை சரிசெய்யவும் ஒரு சில பள்ளமான குடியிருப்புகளில் வெள்ள நீா் புகுந்தால் அதை உடனடியாக தடுத்து நிறுத்த மணல் மூட்டைகள், சூறைக்காற்றால் மரங்கள் சாய்ந்து விழுந்தால் உடனடியாக அப்புறப்படுத்த மரம் அறுக்கும் இயந்திரம் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான பொருள்கள் விராலிமலை நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கந்தா்வகோட்டையில்: கந்தா்வகோட்டையில் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைதுறை உதவி பொறியாளா் மணிக்குமாா் மேற்பாா்வையில் பணியாளா்கள் முன்னெச்சரிக்கையாக நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகளை சேகரித்து வைத்துள்ளனா். திடீா் மழையில் சாலை, குளங்கள் ஏதேனும் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் தயாா் நிலையில் உள்ளனா்.