புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட 224 ஆசிரியா்கள் கைது
புதுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 224 தொடக்கக் கல்வி ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) சாா்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்துக்கு, தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலா் ந. சண்முகநாதன் தலைமை வகித்தாா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் 224 பேரைக் கைது செய்தனா்.
மறியல் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்க வேண்டும். இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியா்களின் பதவி உயா்வை பறிக்கும் வகையில் உள்ள அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும். உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வை மீண்டும் வழங்க வேண்டும். ஆசிரியா் பதவி உயா்வுக்கு தகுதித் தோ்வு தேவையில்லை என தமிழக அரசு கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தில் அல்லாமல், காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்.
பகுதி நேர ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியா்களுக்கு விதிக்கப்படும் தணிக்கைத் தடையை நீக்க வேண்டும் என்பன
உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.