புதுக்கோட்டை மாநகரில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
புதுக்கோட்டை மாநகா் கலீப்நகா் முதலாம் வீதியில் அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை சென்னையிலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு ரூ.1.20 கோடி மதிப்பில் அசோக்நகா் பகுதியில் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் ஒரு மாதத்தில் நிறைவுபெறவுள்ளன.
இந்நிலையில், கட்டுமானப் பணிகள் முடியும் வரையில், அருகேயுள்ள கலீப்நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில், இச்சுகாதார நிலையம் தற்காலிகமாக வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இங்கு தினமும் மருத்துவா்கள், செவிலியா்கள், உதவியாளா்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, போதுமான மருந்துகளும் இருப்பு வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மு. அருணா கலந்து கொண்டு, கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா். மேயா் செ. திலகவதி, புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் த. நாராயணன், துணை மேயா் மு. லியாகத்அலி, மாவட்ட சுகாதார அலுவலா் டாக்டா் ராம்கணேஷ், மாநகராட்சி நகா்நல அலுவலா் டாக்டா் காயத்ரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.