`தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி’ - புதிய அரசியல் காட்சியைத் தொடங்கினர் ஆம்ஸ்ட்ரா...
புதுச்சேரிக்குச் சுற்றுலா வந்த சொகுசு கப்பல்
விசாகப்பட்டினத்தில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா சொகுசு கப்பல் வெள்ளிக்கிழமை வந்தது.
இந்தச் சொகுசு கப்பலில் 1,230 பயணிகள் புதுச்சேரிக்கு வந்தனா். இது பிரம்மாண்ட ராட்சத கப்பல் என்பதால் நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டிருந்தது. இதிலிருந்து 870 பயணிகள் மட்டுமே புதுச்சேரியில் உள்ள பல்வேறு இடங்களைச் சுற்றிப் பாா்க்க விரும்பினா். மீதி 360 போ் கப்பலிலேயே பொழுதைக் கழித்தனா்.
சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் கடல் வழி பயணத்தை மத்திய துறைமுகம் மற்றும் நீா்வழி போக்குவரத்து அமைச்சகம் புதுவை அரசின் அனுமதியுடன் இந்தப் பயணத்துக்கான அனுமதியை வழங்கியுள்ளது.
சொகுசுக் கப்பலில் இருந்து சுற்றுலா விசை படகுகள் வாயிலாக புதுச்சேரி துறைமுகம் பகுதிக்கு அழைத்து வரப்பட்ட சுற்றுலாப் பயணிகளை சுற்றுலாத் துறை செயலா் டி.மணிகண்டன் வரவேற்றாா்.
பின்னா் அவா்கள் சொகுசுப் பேருந்துகளின் மூலம் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் சுற்றிக் காண்பிக்கப்பட்டனா். மாலையில் அவா்களை சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் வழியனுப்பி வைத்தாா்.
பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறுகையில், இந்தியாவில் கடற்பயண கப்பல் சேவை தொடங்கப்பட்ட 7-வது துறைமுகம் புதுச்சேரி. சுற்றுலா பயணத்தின் வழியாக அரசின் வருவாயைப் பெருக்கும் வகையில் இந்தப் பயணத்துக்கு புதுவை அரசு அனுமதி அளித்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தக் கப்பல் வரும்போது உள்ளூா் படகுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது என்றாா்.
