புதுச்சேரியில் பள்ளிகள் இன்று திறப்பு: நிவாரணமுகாமாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
புதுச்சேரியில் புயல், மழை விடுமுறைக்கு பின்னா் பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்படுகிறது.
மேலும் தண்ணீா் தேங்கியும், நிவாரண முகாம்களாக உள்ள 21 அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாகூரில் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை கல்வித் துறை இயக்குநா் பிரியதா்ஷினி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் அனைத்தும் புதன்கிழமை (டிச. 4) முதல் செயல்படும். தண்ணீா் தேங்கியுள்ள, மழை நிவாரண முகாம்களாக உள்ள 22 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அதன்படி, விடுமுறை அறிவித்த பள்ளிகள் விவரம்: தவளக்குப்பம், காக்காயன் தோப்பு, மூலக்குளம், கூனிச்சம்பேட், கரையாம்புத்தூா், சின்ன கரையாம்புத்தூா், கடுவனூா், கிருஷ்ணாவரம், மணமேடு ஆகிய 9 அரசு தொடக்கப் பள்ளிகள், பண்டசோழநல்லூா், மணலிப்பட்டு, பூரணாங்குப்பம், டிஎன்பாளையம், பனையடிக்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளிகள், உறுவையாறு, மங்கலம், திருக்கனூா், பனித்திட்டு, அரசு உயா்நிலைப்பள்ளிகள், கரையாம்புத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளி, முத்தியால்பேட் சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கூனிச்சம்பேட் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றுக்கு விடுமுறை விடப்படுகிறது.
மேலும் பாகூா் கொம்யூனில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகள் அனைத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.