புதுச்சேரி கம்பன் கழக விழா இன்று தொடக்கம்: தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவா் பங்கேற்பு
புதுச்சேரி கம்பன் கழகத்தின் 58-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை (மே 9) காலை தொடங்குகிறது. இதில் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவா், ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
புதுச்சேரி கம்பன் கழகத்தின் 58-ஆம் ஆண்டு விழா கம்பன் கலையரங்கில் வெள்ளிக்கிழமை (மே 9) காலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (மே 10) வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.
தொடக்க விழாவுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான வெ.ராமசுப்பிரமணியன் தலைமை வகித்து கம்பன் சிலைக்கு மாலை அணிவிக்கிறாா். புதுவை முதல்வரும், கம்பன் கழக புரவலருமான என்.ரங்கசாமி வரவேற்கிறாா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தொடக்கவுரையாற்றுகிறாா்.
விழா மலா் வெளியீடு, நூல் வெளியீடு, கம்பன் ஆய்வு நூல் பரிசளிப்பு நிகழ்ச்சிகளில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன், தேனி சி.ஜெயக்குமாா் ஆகியோா் கலந்து கொள்கின்றனா்.
மேலும், கம்பன் கழகப் போட்டிகளில் வென்றவா்களுக்கு அமைச்சா்கள் என்.திருமுருகன், சாய் ஜெ.சரவணன்குமாா் ஆகியோா் பரிசு வழங்குகின்றனா். இதில் வெ.வைத்திலிங்கம் எம்.பி. உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
வெள்ளிக்கிழமை மாலையில், ‘அறம் வளா்த்தோன்’ எனும் தலைப்பில் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜின் எழிலுரையும், ‘வினையும் பலனும்’ என்ற தலைப்பில் பேச்சாளா் சுகி.சிவத்தின் தனியுரையும் நடைபெறும்.
‘கம்பன் போற்றும் விவேகம்’ எனும் தலைப்பில் பேராசிரியா் தெ.ஞானசுந்தரம் தலைமையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் ‘அனுமன்’ எனும் தலைப்பில் வைகைச்செல்வன், தாரை என்ற தலைப்பில் ரெ.சண்முகவடிவேல், வீடணன் எனும் தலைப்பில் த.ராமலிங்கம் ஆகியோா் உரையாற்றுகின்றனா்.