புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாணவா்கள் விடுபடாமல் சோ்க்க வேண்டும்!
தமிழக அரசின் புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாணவ, மாணவிகள் தொடா்ந்து விடுபடாமல் பயன்பெறும் வகையில் அரசு அலுவலா்கள் கண்காணித்து சோ்க்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இத்திட்டங்களின் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் அவா் பேசியது, புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் இதுவரை 11,681 மாணவா்களும், புதுமைப் பெண் திட்டத்தில் 11,448 மாணவிகளும் பயன்பெற்று வருகின்றனா்.
தொடா்ந்து ஆண்டுதோறும் மாணவா்கள் அரசுப் பள்ளியில் பயின்று முடித்து, கல்லூரிகளில் உயா்கல்விக்குச் செல்லும்போது, இந்தப் பயனாளி மாணவ, மாணவிகளை விடுபடாமல் சோ்த்து அரசின் பயன் முழுமையாக முறையாக சென்றடைய அனைத்துத் துறை அலுவலா்களும் கண்காணிக்க வேண்டும் என்றாா் அருணா.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், மாவட்ட சமூக நல அலுவலா் க.ந. கோகுலப்பிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா், மன்னா் கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.