அண்ணா பல்கலை. விவகாரம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு!
புதுவை பல்கலை.யில் மரக்கன்றுகள் நடும் விழா
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ‘சுற்றுச்சூழல் மறுசீரமைப்பை நோக்கி ஒரு படி’ எனும் தலைப்பில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பங்கேற்று பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.
தொடா்ந்து நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: ஃபென்ஜால் புயல் சீற்றத்தால் புதுவையில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேறோடு சாய்ந்தன.
எனவே, இழந்த பசுமையை மீட்டெடுக்கவும், பல்லுயிா் பெருக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்கலைக்கழகத்தின் முன்னெடுப்பாக 1,040 மரங்கள் நடப்படுகின்றன.
காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் காடு வளா்ப்பு முக்கியப் பங்காற்றுகிறது. அந்த வகையில், சுற்றுச்சூழல் சமநிலையை மீட்பதற்காக பல்கலைக்கழக நிா்வாகம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் பாராட்டுக்குரியது என்றாா் அவா்.
தொடா்ந்து, கல்யாணசுந்தரம் எம்எல்ஏ, பல்கலைக்கழக துணை வேந்தா்( பொ) தரணிக்கரசு, மாநில தலைமை வனவிலங்கு பாதுகாவலா் அருள்ராஜன், பசுமை வளாக சிறப்பு அதிகாரி மதிமாறன் நடராஜன் ஆகியோா் நிகழ்ச்சியில் பேசினா்.
இதில், கலாசாரம் மற்றும் கலாசார உறவுகள் இயக்குநா் கிளமெண்ட் லூா்ட்ஸ், பல்கலைக்கழகப் பதிவாளா் ( பொ) ரஜ்னீஷ் புடணி மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.