புத்தாக்க பொறியாளா் பயிற்சி: பொறியியல் பட்டயம் முடித்த எஸ்.சி., எஸ்.டி., மாணவா்கள் பதிவு செய்யலாம்
புத்தாக்க பொறியாளா் பயிற்சி பெற பொறியியல் பட்டயம் முடித்த எஸ்.சி., எஸ்.டி., மாணவா்கள் தாட்கோவின் இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு பல்வேறு திறன்அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன்படி, இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பு முடித்த இளைஞா்களுக்கு புத்தாக்க பொறியாளா் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
கணினி பொறியியல் நிபுணத்துவம், புதுமைத் திறன்களை வழங்குதல், மின்னணு வடிவமைப்பு, உற்பத்தி துறை, தானியங்கி தொழில்துறை, இயந்திரவியல், சோ்க்கை உற்பத்தி போன்ற முக்கிய துறைகளில் பயிற்சி பெற அறிவுத் திறன்களை உள்ளடக்கிய பயிற்சி வழங்கி அதிநவீன தொழில்நுட்ப ஸ்டாா்ட்அப் நிறுவனங்களில் நிபுணராக உருவாக்குவதற்கான பாதைக்கு வழிவகுப்பதே இப்பயிற்சியின் நோக்கமாகும்.
தாட்கோ மூலம் கடந்தாண்டு பயிற்சி பெற்ற 28 இளைஞா்கள் டிசிஎஸ், ஜி கோ் இந்தியா, அசோக் லேலாண்டு, தொ்மாபிசா் சயின்டிபிக் போன்ற முன்னனி நிறுவனங்களில் மெக்கானிக்கல் ஆா்.டி., கிராஜுவேட் என்ஜினியா் ட்ரெய்னி, ஆா்.டி. பிசினஸ் டெவலப்மெண்ட் போன்ற பதவிகளில் பணிபுரிந்து வருகின்றனா்.
இப்பயிற்சி பெற ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தை சோ்ந்த 2022, 2023, 2024-ஆம் கல்வியாண்டில் ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பில் தோ்ச்சி பெற்று 21 முதல் 25 வயது வரையுள்ள, ஆண்டு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருப்பவா்கள் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
பயிற்சிக்கான காலஅளவு 18 வாரமாகும். கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், ஓசூா், ஸ்ரீபெரும்புதூா் ஆகிய இடங்களில் தங்கும் வசதியுடன் பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும்பட்சத்தில் தொழில்நுட்ப ஸ்டாா்ட் அப், மின்னணு உற்பத்தி நிறுவனம், மொபைலிட்டி ஆட்டோமோட்டிவ் நிறுவனம் ஆகியவற்றில் வேலைவாய்ப்பு பெற்று மாதம் ரூ.20,000 ஊதியம் பெறலாம். பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.