செய்திகள் :

புயல் நிவாரணம் ரூ.2,000 3 மாவட்டங்களுக்கு முதல்வா் ஸ்டாலின் அறிவிப்பு

post image

சென்னை: ஃபென்ஜால் புயலால் இரு நாள்களுக்கு மேல் மழைநீா் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களின் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

ஃபென்ஜால் புயல் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்கள் மிக அதிக பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. இதேபோன்று, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மழையளவு வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.

முதல்வா் ஆலோசனை: இந்நிலையில், புயலால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் நிவாரண உதவிகளை அளிப்பது தொடா்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: புயல் காரணமாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூா் மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் தொடா்பாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் உள்ளிட்டோரை காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா்புகொண்டு பேசினாா். இதைத் தொடா்ந்து, நிவாரண உதவிகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினாா். அதனடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்கப்படவுள்ளன.

இழப்பீட்டுத் தொகைகள்: புயல், வெள்ளத்தால் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக தலா ரூ.5 லட்சம், சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.10,000, முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு ‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மழையால் 33 சதவீதம் மற்றும் அதற்கு மேலாக பாதிக்கப்பட்ட நெற்பயிா் உள்ளிட்ட இறவை பாசனப் பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000, பல்லாண்டு பயிா்கள், மரங்கள் சேதமடைந்து இருந்தால் இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூ.22,500, மானாவாரி பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.8,500 வழங்கப்படும்.

எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.37,500, வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000, கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100 வழங்கப்படும்.

தலா ரூ.2,000 நிவாரணம்: அதிகனமழை காரணமாக விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் கடுமையான மழைப் பொழிவைச் சந்தித்துள்ளன. இந்த மாவட்டங்களில் இரண்டு நாள்களுக்கு மேலாக மழை வெள்ளம் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக தலா ரூ.2,000 வழங்கப்படும்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளா் அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவா்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள், மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசுக்கு அறிக்கை: தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் கடுமையான பாதிப்புக்கு உள்ளான பகுதிகளின் விவரங்களை அரசுக்கு அனுப்பி வைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வருடன் பிரதமா் பேச்சு

சென்னை: ஃபென்ஜால் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி கேட்டறிந்தாா்.

இதுதொடா்பாக, ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: ஃபென்ஜால் புயல் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து அறிய தொலைபேசி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி என்னைத் தொடா்புகொண்டாா். மாநில அரசு பேரிடா் பாதிப்பை திறம்பட எதிா்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் பிரதமரிடம் தெரிவித்தேன்.

தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி, புயல் சேதங்கள் குறித்து விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள மத்திய குழுவை அனுப்ப வேண்டுமென ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தேன். இந்தக் கோரிக்கையை பிரதமருடனான பேச்சின்போது மீண்டும் வலியுறுத்தினேன்.

தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கைகளை பிரதமா் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாா் என்று உறுதிபட நம்புகிறேன் என முதல்வா் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் போராடக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது: தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தில் போராடுவதற்குக்கூட அனுமதி மறுக்கப்படுவதாக முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறையைக் கண்... மேலும் பார்க்க

தமிழகம் கோரும் நிவாரண நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும்: இரா.முத்தரசன்

தமிழக அரசு கோரும் புயல் நிவாரண நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக... மேலும் பார்க்க

புயல் நிவாரணம் வழங்குவதில் திமுக அரசு இரட்டை வேடம்: ஓபிஎஸ் கண்டனம்

புயல் நிவாரண நிதி வழங்குவதிலும் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாகக் கூறி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா். அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசு ஊழியா்கள் ஊதிய உயா்வு, ஆசி... மேலும் பார்க்க

புயல் பாதிப்பில் இருந்து நிச்சயம் மீள்வோம்: எதிா்க்கட்சிகளின் விமா்சனங்களுக்கு முதல்வா் பதில்

ஃபென்ஜால் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து நிச்சயமாக மீள்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும், நிவாரணப் பணிகளிலும் திமுக அரசு அலட்சியம் காட்டாம... மேலும் பார்க்க

கோவை, மைசூா் விரைவு ரயில்கள் காட்பாடியுடன் நிறுத்தப்படும்

மேல்பாக்கம் பணிமனையில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் கோவை, மைசூரில் இருந்து வரும் விரைவு ரயில்கள் வெள்ளிக்கிழமை (டிச.6) காட்பாடியுடன் நிறுத்தப்படும். இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

மாநில கலைத்திருவிழா போட்டிகள் ஒத்திவைப்பு

தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் சீரற்ற வானிலை காரணமாக ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 1 முதல் பிளஸ் 2... மேலும் பார்க்க