புளியங்குடியில் காந்தி தினசரி அங்காடி திறப்பு! அமைச்சா் கே.என்.நேரு திறந்து வைக்கிறாா்!
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் திங்கள்கிழமை காந்தி தினசரி காய்கனி அங்காடி திறப்பு விழா நடைபெறுகிறது.
இதுகுறித்து புளியங்குடி நகா்மன்றத் தலைவா் விஜயா சௌந்தரபாண்டியன் கூறியதாவது:
புளியங்குடி நகராட்சிப் பகுதியில் விசாலமான தினசரி காய்கனி அங்காடி வேண்டுமென பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதைத் தொடா்ந்து ரூ.4 கோடியில் அங்காடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. புதிய கட்டடத்தை அமைச்சா் கே.என். நேரு திங்கள்கிழமை மாலை திறந்து வைக்கிறாா்.
இதில், மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா், ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., எம்எல்ஏ-க்கள் ஈ. ராஜா, சதன்திருமலை குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள்,மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனா்.
பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தந்த தமிழக முதல்வா், துணை முதல்வா், நகா்புற வளா்ச்சித் துறை அமைச்சா், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், ஒத்துழைப்பு தந்த நகா்மன்ற உறுப்பினா்களுக்கு நன்றி என்றாா்.