புழல் சிறைக்குள் வீசப்பட்ட கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்: போலீஸாா் விசாரணை
சென்னை புழல் சிறைக்குள் வீசப்பட்ட கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
சென்னை அருகே புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணைக் கைதிகள் சிறையின் வளாகச் சுவா் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் திங்கள்கிழமை இரு பொட்டலங்கள் கிடந்தன. அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலா்கள், அந்த பொட்டலங்களை உயா் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
அவா்கள் அதை திறந்து பாா்த்தபோது, ஒரு பொட்டலத்தில் 30 போதை மாத்திரைகள், 75 கிராம் கஞ்சா, 30 சிகரெட்டுகள், 6 பீடி கட்டு, ஒரு கைப்பேசி, ஒரு சிம் காா்டு ஆகியவை இருந்தன. மற்றொரு பொட்டலத்தில் 20 போதை மாத்திரைகள், 60 கிராம் கஞ்சா, சிகரெட் லைட்டா், 10 சிகரெட், 5 பீடி கட்டு ஆகியவை இருப்பது தெரியவந்தது.
இது குறித்து சிறை அலுவலா் சிவராஜன், புழல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.