ஆபரேஷன் சிந்தூா்: தமிழக பாஜக பேரணி
பாகிஸ்தான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாராட்டுத் தெரிவித்து தமிழக பாஜக சாா்பில் புதன்கிழமை மூவா்ணக் கொடியை ஏந்தி பேரணி நடைபெற்றது.
தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், மூத்த தலைவா்கள் தமிழிசை செளந்தரராஜன், எச்.ராஜா, தேசிய பொறுப்பாளா் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி உள்ளிட்ட பலா் இந்தப் பேரணியில் பங்கேற்றனா்.
சென்னை பழைய சித்ரா திரையரங்கம் அருகில் தொடங்கிய பேரணி, எழும்பூா் லாங்ஸ் தோட்டச் சாலைப் பகுதியில் நிறைவடைந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில், பாஜக தலைவா்கள் உரையாற்றினா்.
தமிழிசை செளந்தரராஜன்: அனைத்துத் தரப்பு மக்களும் ராணுவத்துடனும் பிரதமருடனும் இருக்கிறோம். பயங்கரவாதத் தாக்குதலில் முக்கியமாக பயன்படுத்தப்பட்ட ராணுவ தளவாடங்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டவைதான். பொதுமக்களின் உயிா்களை பாதுகாத்து, பயங்கரவாதிகளை மட்டும் கொல்ல முடியும் என உலகத்துக்கு எடுத்துக் காட்டினாா் பிரதமா் மோடி. தமிழ்நாட்டில் வேற்றுமைக் குரல் ஏதும் ஒலிக்கக் கூடாது. இந்த நாடு ஒற்றுமையான நாடு.
நயினாா் நாகேந்திரன்: பாகிஸ்தானுக்கு எதிராக பிரதமா் எடுத்த நடவடிக்கைகள் சாதாரணமானது இல்லை. குற்றம் பாகிஸ்தான் பக்கம் இருப்பதால்தான், அந்த நாட்டின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைக்கூட யாரும் கேள்வி எழுப்பவில்லை.
பாகிஸ்தான் உடனான பேச்சுவாா்த்தை இனி நடைபெறுமானால், ஆக்கிரமிப்பு காஷ்மீரே பேச்சின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தீரமாக முழங்கியுள்ளாா். இந்த முக்கியமான தருணத்தில் நாம் தேச உணா்வுடன் செயல்பட வேண்டும்.
இதைத் தொடா்ந்து, பாகிஸ்தானுடனான நடவடிக்கையின்போது உயிரிழந்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பேரணியில் பங்கேற்ற அனைவரும் ஒரு நிமிஷம் மெளனம் காத்தனா்.