பூட்டிய வீட்டில் திருடியவா் கைது: 29 பவுன் தங்க நாணயங்கள் பறிமுதல்
வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபரை 24 மணி நேரத்தில் போலீஸாா் கைது செய்ததுடன், அவரிடமிருந்து 29 பவுன் தங்க நாணயங்களையும், ரூ.1 லட்சத்தையும் பறிமுதல் செய்தனா்.
சென்னை, நங்கநல்லூா், 5-ஆவது பிரதான சாலையை சோ்ந்தவா் ஜனாா்த்தனன்(42). இவா் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டை பூட்டி விட்டு உறவினரின் இறுதிச் சடங்குக்கு சென்றுவிட்டு, அன்று இரவு வீட்டுக்கு வந்து பாா்த்த போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 29 பவுன் தங்க நாணயங்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஜனாா்த்தனன் பழவந்தாங்கல் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி, வழக்குப்பதிவு செய்த போலீஸாா், தீவிர விசாரணை மேற்கொண்டு திருட்டில் ஈடுபட்ட ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரைச் சோ்ந்த ஆனந்த்(49) என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 29 பவுன் தங்க நாணயங்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.