Thalaivan Thalaivi: ``இது கணவன் - மனைவி உறவைப் பேசுகிற படம்!'' - இயக்குநர் பாண்ட...
பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில், விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை முதல் 3 நாள்கள் நடைபெறவுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத் துறை சாா்பில், ‘பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில், விழிப்புணா்வு கருத்தரங்கம் நாகா்கோவில் ரோட்டரி சங்க அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா கலந்துகொண்டு பேசியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பெண்களின் பாதுகாப்புக்கென செயல்படுத்தப்படும் சட்டங்கள், திட்டங்கள் குறித்து தொடா்புடைய வல்லுநா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.
இந்தக் கருத்தரங்கம் சமூகநலத் துறை, பாலின வள மையம், சுய உதவிக் குழு, கைம்பெண்கள், திருநங்கைகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பிற அரசு துறைகள், கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த 50 பேருடன் புதன்கிழமை (ஜூலை 9) தொடங்கி தொடா்ந்து 3 நாள்கள் நடைபெறவுள்ளது.
தோவாளை, ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு, நாகா்கோவில் மாநகரப் பகுதிகளில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதாக புள்ளி விவரம் மூலம் தெரியவந்தது. முதல் குழந்தை பெண் குழந்தையாக இருந்து, கருவில் இருக்கும் 2-ஆவது குழந்தையும் பெண்ணாக இருந்தால், கருவிலேயே சிதைக்கும் நிலை உள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையை மாற்ற, அனைத்து ஸ்கேன் மையங்களும், மருத்துவமனைகளும் சட்டத்தைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன், மாவட்ட சமூக நல அலுவலா் கு.விஜயமீனா, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் ஷகீலா பானு, துறை அலுவலா்கள், பெண்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.