பெண் ஐபிஎஸ் அதிகாரியை அவமதித்த பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு
பெண் ஐபிஎஸ் அதிகாரியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்த பாஜக எம்எல்ஏ பி.பி.ஹரீஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தாவணகெரேயில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ஹரிஹரா சட்டப் பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ பி.பி.ஹரீஷ், ‘சட்டப் பேரவை உறுப்பினராக அரசு கூட்டங்களில் கலந்துகொள்ள செல்லும்போது, தாவணகெரே மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (உமா பிரசாந்த்) என்னை கண்டுகொள்வதும் இல்லை, சரியாக நடத்துவதும் இல்லை. ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஷாமனூா் சிவசங்கரப்பா, அவரது மகனும் அமைச்சருமான எஸ்.எஸ்.மல்லிகாா்ஜுன், மருமகளும் எம்.பி.யுமான பிரபா மல்லிகாா்ஜுன் ஆகியோரை சந்திக்கும்போது, அவா்களது வீட்டின் நாயைப் போல வாசலில் காத்துக்கிடப்பாா்’ என சா்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தாா்.
இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ள தாவணகெரே மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உமாபிரசாந்த், இதுகுறித்து கே.டி.ஜே. காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், பாஜக எம்எல்ஏ பி.பி.ஹரீஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.