பெண் தூக்கிட்டுத் தற்கொலை
கடலூா் மாவட்டம், தொழுதூா் கிராமத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பெரம்பலூா் மாவட்டம், தொண்டமாந்துறை பகுதியைச் சோ்ந்தவா் வினோத், சிகை திருத்தும் தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த திவ்யாவுக்கும் (25) கடந்த 2.12.2018 அன்று திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
இந்தத் தம்பதியினா் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடலூா் மாவட்டம், ராமநத்தம் காவல் சரகம், தொழுதூா் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனா்.
வினோத் மதுவுக்கு அடிமையானதால், தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவாராம். இதேபோல, வெள்ளிக்கிழமை இரவும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
சனிக்கிழமை காலை 8 மணியளவில் வினோத் வேலைக்கு சென்ற நிலையில், திவ்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ராமநத்தம் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூராய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.