`பெண் போலீஸாரை டீ, காபி கொடுக்கத்தான் வைத்திருக்கிறார்கள்!’ - முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா
புதுச்சேரியில் கடந்த 10-ம் தேதி முதல் 2025-2026 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் பூஜ்ஜிய நேரத்தில் நேற்று பேசிய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா, ``புதுச்சேரியில் உள்ள 17 லட்சம் மக்கள்தொகையில் 9 லட்சம் பேர் பெண்கள். ஆனால் மூன்று காவல் நிலையங்கள் மட்டுமே இருக்கின்றன. புதுச்சேரி முழுவதும் 440 பெண் போலீஸார் மட்டுமே இருக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அப்படியான சூழலில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் அவர்கள் தங்கள் பிரச்னைகளை சொல்லக்கூடிய இடமாக காவல் நிலையங்கள் இல்லை.

அனைத்து காவல் நிலையங்களிலும் `மகிளா டெஸ்க்’ என்று ஒன்று இருக்கிறது. அதில் பணியாற்றும் பெண் போலீஸாரை அந்த காவல் நிலையங்களில் இருக்கும் இன்ஸ்பெக்டர்களும், சப் இன்ஸ்பெக்டர்களும் டீ, காபி கொடுப்பதற்குத்தான் வைத்திருக்கிறார்கள். போலீஸ் பணியிடங்களில் 50% சதவிகிதம் பெண்களுக்கு வழங்க வேண்டும். புதுச்சேரியிலும், காரைக்காலிலும் மகளிர் காவல் நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும். புதுச்சேரியை பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக மாற்ற வேண்டும். புதுச்சேரி மக்கள்தொகையை கணக்கில் வைத்துப் பார்த்தால் பெண் போலீஸாரின் எண்ணிக்கை 1% சதவிகிதம்கூட இல்லை” என்றார்.