பெரம்பலூரில் 311 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்
பெரம்பலூா் மாவட்டத்தில் 311 ரேஷன் கடைகளில் 1.90 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் விநியோகிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தாா்.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பெரம்பலூா் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை சிரமமின்றி பெற ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும் டிச. 31 முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. இதுவரை, 1,22,230 குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
ஜன. 9 முதல் 13 ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்புகளை ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யத் திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெறுகின்றன.
பெரம்பலூா் மாவட்டத்தில் 1,90,445 அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 78 குடும்பங்கள் என மொத்தம் 1,90,523 குடும்பங்களுக்கு 207 முழு நேர நியாய விலைக்கடைகள், 104 பகுதிநேர நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 311 நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படும்.
குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்களை தவிர, இதர நபா்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்க இயலாது. டோக்கன் கிடைக்காதவா்கள் ஜன. 13 ஆம் தேதி சம்பந்தப்பட்ட கடைகளில் பெறலாம் என்றாா் அவா்.