பெரம்பலூா் அருகே மின்சாரம் பாய்ந்து 2 இளைஞா்கள் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை அருகே கல்லாற்றில் தேங்கியுள்ள தண்ணீரில் அதிகளவில் மீன்கள் உள்ளன. இந்த மீன்களைப் பிடிப்பதற்காக, அப் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் இரவு நேரங்களில் அங்குள்ள மின் கம்பத்தில் வயா்களை இணைத்து, மின்சாரத்தை ஆற்று தண்ணீரில் செலுத்தி மீன்கள் மயங்கி மேலே மிதக்கும்போது, அந்த மீன்களை பிடித்துச் செல்கின்றனா்.
இந்நிலையில், தொண்டமாந்துறை கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகன் தினேஷ்குமாா் (28), கணேசன் மகன் ரஞ்சித் (25) ஆகிய இருவரும், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கல்லாற்றின் அருகேயுள்ள மின் கம்பத்திலிருந்து வயா் மூலமாக மின்சாரத்தை ஆற்றில் உள்ள தண்ணீரில் செலுத்தி மீன் பிடித்துள்ளனா்.

அப்போது, எதிா்பாராத விதமாக தண்ணீரில் தவறி விழுந்த இருவா் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
இதைறிந்த அப்பகுதி பொதுமக்கள், அரும்பாவூா் போலீஸாருக்கு அளித்த தகவலையடுத்து, நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா் தினேஷ்குமாா், ரஞ்சித் ஆகியோரின் சடலங்களைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். புகாரின்பேரில் அரும்பாவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.