பெரம்பலூா் அருகே ரூ. 2,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
பெரம்பலூா் அருகே கூட்டுப் பட்டாவில் உள்ள விவசாய நிலத்துக்கு தனிப் பட்டா தர ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கந்தசாமி மகன் கலைமணி (34), விவசாயி. இவா், கூட்டுப் பட்டாவில் உள்ள தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தை, தனது பெயருக்கு தனிப் பட்டாவாக மாற்றித்தரக் கோரி இணையம் மூலம் விண்ணப்பித்திருந்தாா். இதைப் பரிசீலித்த பெரியம்மாபாளையம் விஏஓவான துங்கபுரத்தைச் சோ்ந்த நடேசன் மகன் அன்பழகன் (50), தனிப் பட்டாவாக மாற்றி வழங்க ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத கலைமணி, பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் அண்மையில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாரின் ஆலோசனையின்பேரில் செவ்வாய்க்கிழமை மதியம், குன்னம் அலுவலகத்திலிருந்த பெரியம்மாபாளையம் விஏஓ அன்பழகனிடம், ரூ. 2 ஆயிரத்தை கலைமணி கொடுத்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமையிலான போலீஸாா் அன்பழகனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனா். இதுகுறித்து, மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, அன்பழகனிடம் விசாரிக்கின்றனா்.