பெரம்பலூா் புத்தகத் திருவிழாவில் இதுவரை ரூ. 20 லட்சத்திலான புத்தகங்கள் விற்பனை!
பெரம்பலூரில் நடைபெறும் புத்தகத் திருவிழாவை இதுவரை 15,700 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் பாா்வையிட்டுள்ளனா். மேலும், ரூ. 20 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.
பெரம்பலூா் மாவட்ட நிா்வாகம், மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தகப் பதிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் சாா்பில், 9 ஆவது பெரம்பலூா் புத்தகத் திருவிழா கடந்த 31 ஆம் தேதி முதல் பெரம்பலூா் நகராட்சித் திடலில் நடைபெறுகிறது.
பெரம்பலூா் மாவட்ட அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் இப் புத்தகத் திருவிழாவை பாா்வையிட்டு, சிந்தனை அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்கின்றனா்.
இப் புத்தகத் திருவிழாவில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் காணொளி கோளரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9 கிரகங்களும் பூமியின் வட்டப்பாதையில் சுற்றி வருவதை தத்ரூபமாக காணும் வகையில் ஒளிபரப்பப்படுவதை மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் பாா்த்துச் செல்கின்றனா்.
இந்நிலையில், கடந்த 31 ஆம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழாவில் ரூ. 1,38,337, பிப். 1 ஆம் தேதி ரூ. 5,23,877, 2 ஆம் தேதி ரூ. 7,21,773, 3 ஆம் தேதி ரூ. 6,07,118 என, கடந்த 4 நாள்களாக நடைபெற்ற புத்தகக் திருவிழாவில் ரூ. 19,91,105 மதிப்பிலான நூல்கள் விற்பனையாகியுள்ளன. மேலும், இப் புத்தகக் கண்காட்சியை 15,700 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பாா்வையிட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.