ஆண்டுக்கு 7.5 லட்சம் வாகனங்களைத் தயாரிக்க இலக்கு: சுசூகி மோட்டார்சைக்கிள்
பெரம்பலூா் மாவட்டத்தில் பலத்த மழை: கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சேதம்
பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால், அரசலூா் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வைத்திருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.
பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பல்வேறு இடங்களில் மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடா்ந்து 3- ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் பலத்த காற்றுடன் தொடங்கிய மழை இரவு வரை பெய்தது. இதனால், ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் மழைநீா் நிரம்பி காணப்படுகிறது.
நெல் மூட்டைகள் சேதம்: இந்நிலையில், பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள அரசலூரில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், அன்னமங்கலம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக, கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு சென்று அடுக்கி வைத்திருந்தனா்.
தொடா்ந்து பெய்து வரும் மழையால் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாததால், அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதோடு, நெல்மணிகள் முளைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள், அரசலூா் நெல் கொள்முதல் நிலையத்துக்கு திங்கள்கிழமை சென்று பாா்வையிட்டு, அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய உத்தரவிட்டனா். இதனால், செவ்வாய்க்கிழமை முதல் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மழை அளவு: பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லிமீட்டரில்) பெரம்பலூா்- 66, எறையூா்- 18,கிருஷ்ணாபுரம்- 28, வி.களத்தூா்- 19, தழுதாழை- 46, வேப்பந்தட்டை- 57, அகரம் சிகூா்- 22, ல்பபைக்குடிக்காடு- 27, புதுவேட்டக்குடி- 33, பாடாலூா்- 78, செட்டிக்குளம்- 28 என மொத்தம் 422 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது.