ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: திமுக ஆா்ப்பாட்டத்தில் கனிமொழி வலியுற...
பெற்ற மகளின் கழுத்தை நெரிப்பாயா? பாலாவை திட்டிய பாலு மகேந்திரா!
சேது படத்தைப் பார்த்த பாலு மகேந்திரா தன்னைக் கடிந்துகொண்டதாக இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் வணங்கான். படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து இப்படம் பொங்கல் வெளியீடாக ஜன. 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
படத்தின் புரமோஷனுக்கான இயக்குநர் பாலா நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற பாலாவிடம், ‘சேது படத்தைப் பார்த்த இயக்குநர் பாலு மகேந்திரா என்ன சொன்னார்?” எனக் கேள்வி கேட்கப்பட்டது.
இதையும் படிக்க: நேசிப்பாயா டிரைலர்!
அதற்கு பாலா, “படத்தைப் பார்த்த பாலு மகேந்திரா படக்குழுவினருக்கு முன் இப்படத்தைப் பார்க்காமல் இறந்து போயிருப்பேனோ? என சொன்னார். பின், என்னை அலுவலகத்திற்கு அழைத்து, ‘ஏன்டா உனக்கு இவ்வளவு குரூர புத்தி? அமைதியாக கல்லூரிக்குச் சென்று படிக்கும் பெண்ணை ஒரு ரௌடி மிரட்டி காதலிக்கச் செய்கிறான். பின், ஒரு சண்டையில் அவன் பைத்தியமாகிறான். அவனைக் காதலித்த பெண்ணுக்கு முறைப்பையன் இருந்தும் நாயகனை நினைத்து உயிர்விடுகிறாள்.
அதைப் பார்க்கும் நாயகனுக்கும் இறுதியில் உண்மையாகவே பைத்தியம் பிடிக்கிறது. நீ யாரையும் வாழவிடவில்லை. நீ எழுதிய நாயகி கதாபாத்திரம் என்பது பெற்ற மகள் போன்றவள். அந்த மகளின் கழுத்தை நெரிப்பாயா?” எனக் கடுமையாகப் பேசினார். நான் உங்களைப்போல் மென்மையானவன் இல்லை. எனக்கு இப்படித்தான் யோசிக்கத் தோன்றுகிறது என்றேன்” எனக் கூறினார்.
மேலும், “சேதுவின் கிளைமேக்ஸில் நாயகன் நாயகியும் இணைந்திருந்தால் இப்படியான வரவேற்பு கிடைத்திருக்காது. நிறைய வினியோகிஸ்தர்கள் கிளைமேக்ஸை மாற்றினால் படத்தை வாங்கிக்கொள்வதாகக் கூறினர். ஆனால், நானும் என் தயாரிப்பாளரும் உறுதியாக இருந்தோம்” என்றார்.