பேராவூரணி: வீடு புகுந்து 500 கிலோ எடை கொண்ட இரும்பு லாக்கர்கள் கொள்ளையடித்த கும்பல்.. மக்கள் அச்சம்!
பட்டுக்கோட்டை, பேராவூரணி அருகே உள்ள மருங்கப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவசேனன் (66). இவரது மகன் அஸ்வின் சண்முகப்பிரியன் லண்டனில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்கிறார். மருமகள் அஸ்வினி கடலுாரில் தங்கி மருத்துவ மேற்படிப்பு படிக்கிறார். இந்நிலையில், தேவசேனன் அவரது மனைவி பூங்கோதை இருவரும் கடந்த மார்ச் 22ம் தேதி, மருமகள் அஸ்வினியை பார்க்க கடலுார் சென்று விட்டனர்.

இதையடுத்து ஆள் இல்லாததால் வீடு பூட்டப்பட்டிருப்பதை அறிந்த கொள்ளையர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த இரண்டு இரும்பு லாக்கரை துாக்கி சென்று விட்டனர். இதைத் தொடர்ந்து 24ம் தேதி காலை, தேவசேனன் வீட்டில் வேலை பார்க்கின்ற ஜோதி வீட்டு வேலைக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தவர் தேவசேனனுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, தேவசேனனின் உறவினர் காந்தி, வீட்டில் வந்து பார்த்துவிட்டு இரண்டு லாக்கர் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். உடனே கடலுாரில் இருந்து திரும்பிய தேவசேனன் இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீஸில் புகார் அளித்தார். விசாரணையில், கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, மர பீரோக்களை திறந்து பார்த்துள்ளனர். அதில் எந்த பொருளும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அதன் பின்னர் 250 கிலோ எடை கொண்ட இரண்டு இரும்பு லாக்கரை தூக்கி சென்றுள்ளனர். 80 அடி துாரத்திற்கு லாக்கரை இழுத்துச் சென்றதுடன் முள்வேலியை நறுக்கி, வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இரண்டு லாக்கரில் 12 கிலோ வெள்ளி பொருட்கள், 12 சவரன் தங்க நகை இருந்ததாக தேவசேனன் போலீஸில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தலா 250 கிலோ டை கொண்ட அந்த இரும்பு லாக்கரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தூக்கி செல்வதற்கு குறைந்தது ஆறு பேர் வேண்டும். கொள்ளையர்கள் மாடியிலிருந்து இறக்கி, தூக்கி சென்றுள்ளனர். இதன் மூலம் ஒரு கும்பலாக கொள்ளையடிக்க வந்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். கடந்த ஓரு வருடத்தில் மருங்கப்பள்ளம், நாடியம், ஊடையக்காடு பகுதிகளில் ஆளில்லாத வீடுகளை குறி வைத்து, 6 வீடுகளில் கொள்ளையர்கள் திருடியுள்ளனர். ஆனால், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.