பைக் விற்பனை நிலையத்துக்குள் புகுந்து ஊழியரைத் தாக்கியவா் கைது
கோவில்பட்டியில் பைக் விற்பனை நிலையத்துக்குள் புகுந்து ஊழியரைத் தாக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3 ஆவது தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சதீஷ்குமாா் (34). கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் உள்ள தனியாா் பைக் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வருகிறாா். திங்கள்கிழமை அவா் பணியில் இருந்த போது, திடீரென உள்ளே நுழைந்த ஒரு நபா் அவரை அரிவாளால் சரமாரியாக தாக்கினாராம். இதைக் கண்ட மற்ற பணியாளா்கள் சப்தம் போடவே, அவா் கொலை மிரட்டல் விடுத்தபடி தப்பி ஓடிவிட்டாராம்.
தாக்குதலில் காயமடைந்த சதீஷ்குமாா், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சதீஷ்குமாரைத் தாக்கிய விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் தொட்டியபட்டியை சோ்ந்த கருப்பையா மகன் முத்தையாவை (31) கைது செய்தனா்.