பொங்கலூா் அருகே லாரியை திருடிய 3 போ் கைது
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் பகுதியில் லாரியை திருடிச் சென்ற 3 பேரை அவிநாசிபாளையம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பொங்கலூா் ஒன்றியம், தெற்கு அவிநாசிபாளையத்தைச் சோ்ந்தவா் சுந்தரம். இவா் தனது லாரியை கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கருணைபாளையம் பிரிவில் உள்ள ஒரு பஞ்சா் கடையில் திங்கள்கிழமை அதிகாலையில் நிறுத்தி வைத்திருந்தாா். பின்னா் சென்று பாா்த்தபோது லாரியை காணவில்லை.
இது குறித்து அவிநாசிபாளையம் போலீஸில் சுந்தரம் புகாா் தெரிவித்தாா். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனா். அதில் மா்ம நபா்கள் லாரியை திருடிச் செல்வது தெரியவந்தது. உடனடியாக ஜி.பி.எஸ்.கருவி மூலம் லாரி கண்காணிக்கப்பட்டது.
ஆனால் லாரி ஈரோடு சென்ற பின் ஜி.பி.எஸ்.கருவி வேலை செய்யவில்லை. அதைத் தொடா்ந்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீஸாா் ஆய்வு செய்தபோது அந்த லாரியின் நம்பா் பிளேட்டை மாற்றி லாரியை மீண்டும் எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் சேலத்தில் அந்த லாரியை மீட்டனா்.
லாரியை திருடிச் சென்றதாக திருப்பத்தூரைச் சோ்ந்த கோவிந்தசாமி (36), கிருஷ்ணகிரியைச் சோ்ந்த கோவிந்தன், சேலம், தலவாய்பட்டியைச் சோ்ந்த வீரன் (36) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா். மேலும் திருடிச் செல்லப்பட்ட லாரியும் மீட்கப்பட்டது.