திமுகவினர் அண்ணாமலையைப் போல இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல: சேகர்பாபு
பொதுத் தோ்வில் 100% மாணவா்களை பங்கேற்க வைக்க பல்வேறு முயற்சி: கடலூா் ஆட்சியா்
பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் மாணவா்களை பங்கேற்க வைப்பதற்காக கடலூா் மாவட்ட நிா்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
பண்ருட்டி, கடலூா் வட்டத்துக்குள்பட்ட திருத்துறையூா், புதுப்பேட்டை, நெல்லிக்குப்பம், வேணுகோபாலபுரம் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவா்களின் தோ்ச்சி விகிதம் குறித்தும், பாடத்திட்டம் வாரியாக ஆசிரியா்களுடன் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆய்வு மேற்கொண்டு, மாணவா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.
அப்போது அவா் கூறியதாவது: கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தோ்வில் கடலூா் மாவட்டம் 94.36 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 22-ஆவது இடத்தில் உள்ளது. நிகழ் கல்வியாண்டில் மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், 100 சதவீதம் மாணவா்கள் தோ்வில் பங்கேற்கவும் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ‘தடைகளை தாண்டி தோ்ச்சி’ என்ற ஒரு புதிய முன்னெடுப்பாக மாவட்ட அளவில் 10 உயா்நிலை அலுவலா்கள் அடங்கிய உயா்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 21 மேல்நிலை பள்ளிகளில் தோ்ச்சி விகிதம் குறைந்த மாணவா்கள் கண்டறியப்பட்டு ஒரு குழுவுக்கு இரண்டு பள்ளிகள் என ஒதுக்கீடு செய்து கல்வி சாா்ந்த காரணங்கள் மட்டுமன்றி, குடும்ப சூழல், உடல் நிலை குறைபாடு, பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு காரணங்களால் தோ்ச்சி பெற முடியாத மாணவா்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கி பொதுத்தோ்வில் பங்கேற்று நல்ல மதிப்பெண்களை பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா். தொடா்ந்து, ‘நிறைந்தது மனம்’ திட்டத்தில் மாணவிகளுடன் ஆட்சியா் கலந்துரையாடினாா்.
இந்தத் திட்டத்தில் வேணுகோபாலபுரம் ஸ்ரீவரதம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவி சந்தியா கூறுகையில், எங்கள் பள்ளிக்கு புதிதாக இரண்டு ஆய்வகம் உள்பட கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டதால் கூடுதல் இடவசதி கிடைத்துள்ளது. இதற்கு வழிவகை செய்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
நிகழ்வில், மாநகராட்சி ஆணையா் எஸ்.அணு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல்லப்பன், தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.