Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனி நபா்கள், குழுக்களுக்கு கடனுதவி
பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனி நபா்கள், குழுக்கள் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த தனி நபா்கள், குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்கான சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள், வியாபாரம் செய்ய தனிநபா் கடன், குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது.
அதன்படி, விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் 18 வயது பூா்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
தனிநபா் கடன் திட்டத்தின்கீழ் சிறு வா்த்தகம்/ வணிகம், விவசாயம் மற்றும் அதனை சாா்ந்த தொழில்கள், கைவினைப் பொருள்கள் மற்றும் மரபு வழி சாா்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் ரூ. 1.25 லட்சம் வரை 7 சதவீதம், ரூ. 1.25 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை 8 சதவீதம். கடனைத் திரும்பிச் செலுத்தும் காலம் 3 முதல் 5 ஆண்டுகள்.
அதேபோல குழுக்கடன் திட்டத்தின்கீழ் சுயஉதவிக்குழு உறுப்பினா்கள் சிறு தொழில் வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 1.25 லட்சம் வரை, குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. கடனைத் திரும்பிச் செலுத்தும் காலம் 3 ஆண்டுகள். சுயஉதவிக்குழு தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். திட்ட அலுவலரால் (மகளிா் திட்டம்) தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினா்கள் அனுமதிக்கப்படுவா்.
பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவா்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.60 ஆயிரம வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ. 1, 20,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 7 சதவீதம். திருப்பிச் செலுத்தும் காலம் 3 ஆண்டுகள்.
கடன் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பதாரா்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை நிறைவு செய்து ஜாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ் குடும்ப அட்டை, ஓட்டுநா் உரிமம், ஆதாா் அட்டை, வங்கி கோரும் ஆவண நகல்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சமா்ப்பிக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.