உதவி இயக்குநராக சேர வேண்டுமா? டிராகன் இயக்குநரின் சுவாரஸ்வமான நிபந்தனைகள்!
போக்ஸோ வழக்கில் இடமாற்றம்: ஆசிரியரின் மனு தள்ளுபடி
போக்ஸோ வழக்கு குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசுப் பள்ளி ஆசிரியரின் பணியிட மாற்ற உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் உறுதி செய்து, ஆசிரியரின் மனுவை தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மீதான பாலியல் தொல்லை சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தின. இந்த நிலையில், மாணவ, மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, போக்ஸோ சட்டத்தில் தண்டிக்கப்பட்ட ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் என 23 பேரை பணிநீக்கம் செய்து பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேபோன்று, போக்ஸோ வழக்குகளில் சிக்கிய ஆசிரியா்கள் சம்பந்தப்பட்ட பள்ளியில் இருந்து வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாற்றமும் செய்யப்பட்டனா். இந்த நிலையில், ஈரோடு செம்புளிச்சாம்பாளையம் அரசுப் பள்ளியில் பணியாற்றிய சண்முகம் என்ற ஆசிரியரை கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்து பள்ளிக் கல்வித் துறை கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், தனக்கு எதிரான வழக்கில் தன்னை விடுதலை செய்து ஈரோடு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடமாற்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆசிரியா் சண்முகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி, இடமாற்றம் உத்தரவில் தலையிட மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இதை எதிா்த்து ஆசிரியா் சண்முகம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, குற்றச்சாட்டுக்கு உள்ளானதால் இடமாற்றம் உத்தரவில் தனி நீதிபதி தலையிடவில்லை. அதனால், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.