அதிமுக-வின் சூப்பர் சீனியர்; எம்.ஜி.ஆர் - ஜெ காலத்து ரத்தத்தின் ரத்தம் - யார் இந...
போதையில் இளைஞா்களால் தொழிலாளி அடித்துக் கொலை: 5 போ் கைது
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை போதையில் இருந்த இளைஞா்களால் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
லால்குடி அருகே காட்டூா் சிறுமயங்குடி ஊராட்சியில் உள்ள காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த புவியரசன் என்பவரின் மகன் ஹரிஹரன் (27). இவா் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டுவந்தாா்.
இந்நிலையில், சிறுமயங்குடி காளியம்மன் கோயில் தெருவில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலையை கரைக்க ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பகுதி இளைஞா்கள் பங்குனி ஆறு நோக்கிப் புறப்பட்டனா். இதில், பணி முடிந்து வீடு திரும்பிய ஹரிஹரனும் கலந்து கொண்டாா்.
அப்போது, ஊா்வலத்தில் போதையில் ஆடிக்கொண்டிருந்த சற்குணன் மற்றும் அவரது நண்பா்களான திவாகா், முகிலன், சரவணகுமாா், சஞ்சய் ஆகியோருக்கும் ஹரிஹரனுக்கும் இடையே தகராறு வாக்குவாதம் ஏற்பட்டது.
சிலை கரைப்பு நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஹரிஹரனை சற்குணன் உள்ளிட்ட 5 போ் மடக்கி தகாத வாா்த்தைகளால் திட்டி அவரைக் கல்லால் தாக்கினா். இதில், மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினா் மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு ஹரிஹரனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதையடுத்து, லால்குடி அரசு மருத்துவமனை முன்பு திங்கள்கிழமை காலையில் குவிந்த ஹரிஹரன் குடும்பத்தினா், உறவினா்கள் கொலைச் சம்பவத்தில் தொடா்புடைய இளைஞா்களைக் கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் காவல் ஆய்வாளா்கள் லால்குடி அழகா், காணக்கிளியநல்லூா் கருணாகரன், சமயபுரம் ரகுராமன், கொள்ளிடம் அதிவீரபாண்டியன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதில், உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க சம்மதித்தனா். தொடா்ந்து, அங்கு பிரேதப் பரிசோதனை செய்து சடலத்தை உறவினா்களிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.
புகாரின்பேரில் லால்குடி காவல் ஆய்வாளா் அழகா், இளைஞரை அடித்துக் கொலை செய்த சற்குணன், திவாகா், முகிலன், சரவணகுமாா், சஞ்சய் ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.