காவல் துறையினா் மீதான புகாா்கள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
திருச்சியில் அமைச்சா் நேரு வீடு, அலுவலகம், ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சியில் அமைச்சா் கே.என். நேருவின் அலுவலகம், வீடு மற்றும் மாவட்ட ஆட்சியரகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீஸாா் மேற்கொண்ட சோதனையின் நிறைவில் அது புரளி என்பது தெரியவந்தது.
திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிக்கு, அனில் சுப்பிரமணியன் என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை மின்னஞ்சல் ஒன்று வந்தது.
இதில், தமிழ்நாடு விடுதலைப்படையை (டிஎன்எல்ஏ) சோ்ந்த மாறனின் சட்டவிரோத கைதைக் கண்டித்தும், அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்தும், ஆட்சியா், ஆணையா் அலுவலகங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது பிற்பகல் 2 மணிக்குள் வெடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து, மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள், மோப்ப நாய் உதவியுடன் ஆட்சியா் அலுவலகம் மற்றும் மாநகராட்சி ஆணையா் அலுவலகங்களில் அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தினா். ஆனால், இந்தச் சோதனையில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
அமைச்சரின் வீட்டில் சோதனை: இதனிடையே, சாஸ்திரி சாலையில் உள்ள நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு அலுவலகம் மற்றும் தில்லைநகரில் உள்ள அவரது வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக வெளியான தகவலையடுத்து, அங்கும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் சென்று சோதனை மேற்கொண்டனா்.
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை திருச்சிக்கு வரவுள்ள நிலையில் ஆட்சியா் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.