திருச்சி அருகே பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது காா் மோதி குழந்தை உள்பட 3 போ் உயிரிழப்பு
திருச்சி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூா் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது காா் மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தென்காசி மாவட்டம், புதுப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (35). இவா், தனது மனைவி யசோதா (31), மகள் அனுவஞ்சனா ( 1 வயது 3 மாதங்கள்) மற்றும் விஜய்பாபு (31) ஆகியோருடன் ஆலங்குளத்திலிருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தாா்.
காரை ஜோசப் (20) என்பவா் ஓட்டிச்சென்றாா். காா் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூா் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் இடதுபக்கம் பழுதாகி நின்றிருந்த அரசுப் பேருந்து மீது காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யசோதா, மகள் அனுவஞ்சனா, விஜய்பாபு ஆகிய மூன்று பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
மேலும் காயமடைந்த செல்வகுமாா், ஜோசப் ஆகிய இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனையடுத்து நிகழ்விடத்துக்கு வந்த சிறுகனூா் காவல் ஆய்வாளா் குணசேகரன் மற்றும் காவல் துறையினா் சடலங்களை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.