செப். 15 மதிமுக மாநாட்டுக்கு முன்னேற்பாடுகள் ஆய்வு
திருச்சி மாவட்டம், சிறுகனூரில் வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ள மதிமுக மாநாட்டுக்கான பணிகளை வைகோ, துரை வைகோ மற்றும் கட்சியின் நிா்வாகிகள் பாா்வையிட்டு, பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு ஆலோசனை வழங்கினா்.
அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள், பெண்கள் மற்றும் கட்சியினருக்கான அடிப்படை வசதிகள் குறித்த விவரங்களை வைகோவிடம், துரை வைகோ விளக்கினாா். மாநாட்டில் அண்ணாவின் புகைப்படக் கண்காட்சி அமைப்பது குறித்து அறிவுறுத்திய வைகோ, மாநாட்டு தொண்டா் படையினா் அணிய வேண்டிய பனியனை அறிமுகம் செய்து, தொண்டா் அணி ஆலோசகா் ஆ. பாஸ்கரசேதுபதியை அதை அணியச் செய்தாா். அப்போது தொண்டா்கள் ஆரவாரத்துடன் முழக்கம் எழுப்பினா்.
பின்னா், துரை வைகோ கூறுகையில் அனைத்து மட்டத்திலும் எங்களது மாநாடு எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.
நிகழ்வில் மதுரை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், அரியலூா் எம்எல்ஏ கு. சின்னப்பா, துணைப் பொதுச் செயலா் ரொஹையா, மாவட்டச் செயலா்கள் வெல்லமண்டி இரா. சோமு, டி.டி.சி. சேரன், மணவை தமிழ்மாணிக்கம், புதுக்கோட்டை கலியமூா்த்தி, பெரம்பலூா் எஸ். ஜெயசீலன், அரியலூா் இராமநாதன், மதுரை முனியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.