போதையில் தகராறு; அண்ணனை கொன்ற தம்பி போலீஸில் சரண் - மதுவால் நடந்த விபரீதம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி அரசமர தெருவைச் சேர்ந்த ராஜா இவரது மகன்கள் அஜித்குமார் (27) டிப்ளமோ படித்துள்ளார். ராம்குமார் (25) டூ விலர் மெக்கானிக். ராஜா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
அஜித்குமாரின் தாய் விஜயா தனது இளைய மகள் வீட்டில், திருப்பூரில் வசித்து வருகிறார். இந்நிலையில், அஜித்குமார் வேலைக்கு செல்லாமல், தினமும் குடித்து விட்டு, வீட்டிலும் தெருவிலும் தகராறு செய்து வந்துள்ளார்.

இது குறித்து அஜித்குமாரை இவரது தம்பி ராம்குமார் பலமுறை கண்டித்து வந்துள்ளார். இதையடுத்து, நேற்று இரவு வழக்கம் போல் அஜித்குமார் குடித்து விட்டு போதையில் வீட்டில் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ராம்குமார் அவரிடம் சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கைகலப்பானது.
இதில் ராம்குமார் தனது அண்ணன் அஜித்குமாரை அடித்து கீழே தள்ளியதில் தலையில் அடிப்பட்டது. அதன் பிறகும் ஆத்திரம் அடங்காமல் வீட்டில் இருந்த ஒயரில் அஜித்குமார் கழுத்தை நெறித்து கொன்றார். பிறகு, இறந்த அண்ணன் அஜித்குமார் உடலை, வீட்டின் பின் புறம் உள்ள செப்டிக் டேங்கில், போட்டு மூடி விட்டு எதுவும் நடக்காதது போல் ராம்குமார் துாங்கி விட்டார்.

இதையடுத்து, அண்ணனை கொலை செய்து விட்டதை நினைத்து மனம் வருந்தி அழுதிருக்கிறார். அவருக்கு இதை மறைக்கவும் மனசு வரவில்லை. உடனே, நடுக்காவேரி போலீஸில், சரணடைந்துடன் போலீஸாரிடம் அன்ணனை கொலை செய்து விட்டேன் என்றுள்ளார்.
இதைகேட்ட போலீஸார் அதிர்ந்தனர். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் அஜித்குமார் உடலை மீட்டனர். பின்னர் வழக்கு பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர். எனக்குனு இருந்த என் அண்ணனை கொலை செய்து விட்டேன் என புலம்பி கொண்டே இருந்துள்ளார். இந்த சம்பவம் திருவையாறு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.