போராட்டக்காரா்கள் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை
தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தக் கோரி போராடியவா்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியைச் சோ்ந்த சிக்கந்தா், அப்துல் மஜீத் ஆகியோா் தாக்கல் செய்த மனு:
தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரியும், அரசு மருத்துவமனையை மேம்படுத்தக் கோரியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இந்த நிலையில், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களில் சிலா், அரசு மருத்துவமனை முன் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக அவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். பொதுமக்களின் அடிப்படை தேவையான ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தக் கோரி போராட்டம் நடத்திய எங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தனா்.
இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி தனபால் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா்கள் மீது பதியப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக் காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடா்பாக தொண்டி காவல் நிலைய ஆய்வாளா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.