இந்திய அளவில் அதிக வருவாய்: 34-ஆவது இடத்தில் கோவை ரயில் நிலையம்!
போலீஸ் பாதுகாப்புடன் கேரளம் கொண்டு செல்லப்படும் மருத்துவக் கழிவுகள்: ஆட்சியர்
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் கேரள மாநிலத்துக்கே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
சுத்தமல்லியை அடுத்த நடுக்கல்லூா், பழவூா், கொண்டாநகரம் சுற்று வட்டாரங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூன்று நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
இதனிடையே நடுக்கல்லூா் உள்ளிட்ட நான்கு இடங்களிலும் சேகரிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் மற்றும் தனியாா் மருத்துவமனை கழிவுகள் தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கான மருந்து குப்பிகள், ஊசிகள், ரத்த மாதிரிகள், ஆவணங்களை திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சேகரித்து பசுமைத் தீா்ப்பாயத்திடம் ஒப்படைத்தது.
அதைத் தொடா்ந்து பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவுப்படி கேரள மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைமைப் பொறியாளா் பின்சி அகமது, சுகாதாரத் துறை அதிகாரி கோபுகுமாா் ஆகியோா் தலைமையில் திருவனந்தபுரம் மாநகராட்சி அலுவலா்கள், மருத்துவக் கழிவுகளை அகற்றும் அமைப்பினா் உள்பட 8 போ் கொண்ட குழு திருநெல்வேலி மாவட்டத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட நடுக்கல்லூா், கொண்டாநகரம், பழவூா், இலந்தைக்குளம், சிவஞானபுரம் உள்பட 7 இடங்களிலும் நேரில் ஆய்வு செய்தனா். அவா்களும், மருத்துவக் கழிவுகளின் மாதிரிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரித்து கொண்டனா்.
இந்த சம்பவம் தொடர்பாக சுத்தமல்லி காவல் நிலையத்தில் மூன்று வழக்குகளும், முக்கூடல் சீதபரப்ப நல்லூர் முன்னீர்பள்ளம் காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கு என மொத்தம் ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது . தற்போது வரை இந்த சம்பவம் தொடர்பாக கேரள மாநிலத்தை சார்ந்தவர் ஒருவர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கேரளத்தில் இருந்து நெல்லை வந்த 25 பேர் கொண்ட குழுவினர் மருத்துவக் கழிவுகளை கேரள மாநிலத்துக்கே திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் ஜேசிபி எந்திரம் மூலம் குப்பைகளை 16 லாரிகளில் சேகரித்தனர். கேரளம் செல்லும் வழியில் குப்பைகள் கீழே கொட்டிவிடாமல் இருப்பதற்காக தார்ப்பாய்கள் சுற்றி கட்டப்பட்டது. குப்பைகள் அள்ளும் பணி ஞாயிற்றுக்கிழமை இரவு முடியும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அனைத்து லாரிகளும் திருநெல்வேலியில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கேரளம் மாநிலம் கொல்லம் கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அவை தரம் பிரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் அழிக்கப்படும் என குப்பைகள் அள்ளுவதை ஆய்வு செய்த கேரளம் மாநில ஐஏஎஸ் அதிகாரி சாக்சி தெரிவித்தார்.
மேலும் குப்பைகள் அள்ளுவதை திருநெல்வேலி மாவட்ட உதவி ஆட்சியர் அர்பித் ஜெயின், பயிற்சி ஆட்சியர் அம்பிகா ஜெயின் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் குப்பை அள்ளும் இடங்களுக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிக்க |40 ஆண்டுகளுக்கு மேல் சிறை, உலகின் தனிமையான மனிதக்குரங்கு!
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் 16 லாரிகளில் கேரள மாநிலத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரவு 7.30 மணிக்கு மேல் கொண்டு செல்லப்படுகிறது. கழிவுகளை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு முன்பு போலீஸ் பாதுகாப்போடு திருநெல்வேலி மாவட்ட எல்கையை கடந்ததும் தென்காசி மாவட்ட போலீசார் கேரள மாநில எல்லையான புளியரை வரை சென்றுவிட்டு அங்கு வாகனங்கள் செல்லும் காட்சியை விடியோ எடுத்துவிட்டு திரும்புவார்கள்.
குப்பை கொட்டப்பட்ட இடங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படும். திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்குள் மீண்டும் கழிவுகள் கொட்டப்படாத வகையில் கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள 18 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்படும். எத்தனை லாரிகளில் குப்பைகள் கொண்டு செல்லப்படுகிறது குறித்த விடியோ ஆதாரங்களுடன் விரிவான அறிக்கை பசுமை தீர்ப்பாயத்திடம் சமர்ப்பிக்கப்படும் என கூறினார்.
பல ஆண்டுகளாக கேரளம் மாநிலத்தில் இருந்து இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவ கழிவுகள் திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்டு வந்த நிலையில் முதன்முறையாக கழிவுகள் மீண்டும் கேரளத்திற்கே திருப்பி அனுப்பப்படுவது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.