செஞ்சி அருகே மது அருந்துவதில் தகராறு: கிணற்றில் தள்ளி நண்பா் கொலை- 2 போ் கைது
மகனால் வெட்டப்பட்ட தாயின் கைகள்... 9 மணி நேர அறுவை சிகிச்சை - ராஜீவ் காந்தி மருத்துவமனையின் சாதனை!
சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த 40 வயது பெண்ணின் இரண்டு கைகளையும், அவரது மகனே குடும்ப தகராறில் வெட்டி உள்ளார். அந்த பெண்ணின் இரு கைகளையும் மீண்டும் இணைத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
இது குறித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் தேரணி ராஜனிடம் பேசியபோது, அவர் கூறியதாவது, "ஏதோ ஒரு குடும்ப தகராறால் குறிப்பிட்ட அந்தப் பெண்ணின் இரண்டு கைகளையும் அந்தப் பெண்ணின் மகன் வெட்டிவிட்டார். இதில் அந்தப் பெண்ணின் இடது கையின் மணிக்கட்டு முழுவதும் வெட்டுப்பட்டுவிட்டது. சின்ன தோல் மட்டும்தான் இரண்டையும் இணைத்திருந்தது. வலது கை பாதி வெட்டுப்பட்டு இருந்தது.
இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 20-ம் தேதி இரவு சுமார் 7:30 மணி அளவில் நடந்துள்ளது. அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் இரவு 11:30 மணிக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அந்தப் பெண்ணின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இங்கு (ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை) அழைத்து செல்லுமாறு கூறியிருக்கின்றனர்.
அந்தப் பெண் இங்கு வரும்போது டிசம்பர் 21-ம் தேதி அதிகாலை 2.15 மணி ஆகியிருந்தது. அவரை முழுவதும் பரிசோதித்து எங்களது மருத்துவக் குழு ரத்தத்தை ஏற்றியது. தலைமை மருத்துவர் சுகுமார், மருத்துவர் செல்வக்குமார், மருத்துவர் ரஷிதா உள்ளிட்ட 21 பேர் கொண்ட மருத்துவக் குழு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை தொடங்கியது. இந்த குழுவில் மயக்கவியல் மருத்துவர், எலும்பியல் நிபுண மருத்துவர்களும் அடங்கியிருந்தனர்.
அந்தப் பெண்ணிற்கு நாளங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது மற்றும் எலும்புகள் உடைந்துவிட்டது. . எங்களது மருத்துவக் குழு டிசம்பர் 21-ம் தேதி அதிகாலை 6 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சையை மதியம் 3.30-க்கு முடித்தது. இது கிட்டத்தட்ட 9 மணி நேர அறுவை சிகிச்சை.
இரண்டு கைகளுக்குமே ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. சிகிச்சைக்கு பின்னர் சிறிது நேரம் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு, பின்னர் அது நீக்கப்பட்டுள்ளது. தற்போது அந்தப் பெண்மணி நன்றாக இருக்கிறார். கைக்கான ரத்த ஓட்டமும் இப்போது நன்றாக இருக்கிறார். இனி அறுவை சிகிச்சை தையல்கள் பரமாரிக்கப்பட்டு, அது சரியானப் பின்னர் கைகளுக்கான பயிற்சி கொடுக்கப்படும். அதன் பின்னர், அந்தப் பெண்மணி கைகள் முன்பு மாதிரியே இயக்கம் பெறும்" என்று பேசினார்.