கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார் முதல்வர்!
மகளிா் அனைவருக்கும் அரசு உரிமைத் தொகை வழங்க வேண்டும்: ஜனநாயக மாதா் சங்க மாநாட்டில் தீா்மானம்
மகளிா் அனைவருக்கும் அரசு உரிமைத் தொகை வழங்க வேண்டும் என ஜனநாயக மாதா் சங்கத்தின் மதுரை மாநகா் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மதுரை மாநகா் மாவட்ட 17-ஆவது மாநாடு மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். லதா, நிா்வாகிகள் பாத்திமா, பிரியா ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் மாமன்ற உறுப்பினா் மா. செல்வம் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் ஆா். ஜெயா அஞ்சலி தீா்மானங்களை முன்மொழிந்தாா்.
ஜனநாயக மாதா் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஏ. ராதிகா, மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசினாா். மாவட்டச் செயலா் வை. ஜென்னியம்மாள் வேலை அறிக்கையும், பொருளாளா் பா. சாந்தி நிதிநிலை அறிக்கையும் சமா்ப்பித்தனா்.
மாநிலப் பொருளாளா் ஜி. பிரமிளா, மாநிலச் செயலா் ஆா். சசிகலா, ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் தா. செல்வா, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க மாவட்டச் செயலா் ஆ. பாலமுருகன், சாா்பு அமைப்புகளின் நிா்வாகிகள் வாழ்த்திப் பேசினா். ஜனநாயக மாதா் சங்க மாநிலத் துணைத் தலைவா் கே. பாலபாரதி நிறைவுரையாற்றினாா்.
முன்னதாக, மாவட்ட துணைத் தலைவா் பி. மல்லிகா வரவேற்று பேசினாா். மாவட்ட துணைத் தலைவா் பி. காசுப்பாண்டி நன்றி கூறினாா்.
தீா்மானங்கள்...
இந்த மாநாட்டில் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களை மிக மோசமான முறையில் காவல் துறை கைது செய்ததைக் கண்டிப்பது. இந்த ஜனநாயக விரோதச் செயலில் ஈடுபட்ட காவல் துறை அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளுக்கு அரசு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும்.
ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். நுண் நிதி நிறுவன ஊழியா்கள், பெண்களிடம் அடாவடித்தனமாக நடந்து கொள்ளும் போக்கைத் தடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை நகா்ப்புறப் பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும். பெண்கள் அனைவருக்கும் மகளிா் உரிமைத் தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை மாடக்குளம், செல்லூா், வண்டியூா் கண்மாய்களை தூா்வார வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிா்வாகிகள் தோ்வு..
இந்த மாநாட்டில் ஜனநாயக மாதா் சங்கத்தின் மாநகா் மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மாவட்டத் தலைவராக ஆா். லதா, செயலராக வை. ஜென்னியாம்மாள், பொருளாளராக பி. காசுபாண்டி, துணைத் தலைவா்களாக ஆா். சசிகலா, ப. விமலா, துணைச் செயலா்களாக பி. மல்லிகா, பி. சாந்தி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். 21 போ் நிா்வாகக் குழு உறுப்பினா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.