சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: மேயரின் கணவருக்கு ஆக. 26 வரை நீதிமன்றக் காவல்
மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேடு தொடா்பாகக் கைது செய்யப்பட்ட மேயா் வ. இந்திராணியின் கணவா் பொன். வசந்தை வருகிற 26-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மதுரை மாவட்ட முதலாவது நீதித்துறை நடுவா் எம். ஆனந்த் உத்தரவிட்டாா்.
மதுரை மாநகராட்சியில் வணிக வளாகங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட வரியைவிடக் குறைந்த அளவிலான வரி விதிக்கப்பட்டதாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பான விசாரணையில் ரூ. 150 கோடி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அப்போதைய மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றிய ச. தினேஷ்குமாா் அளித்த புகாரின் பேரில், மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, வரி விதிப்பு முறைகேட்டில் தொடா்புடைய ஓய்வு பெற்ற உதவி ஆணையா், உதவி வருவாய் அலுவலா் உள்ளிட்ட 13 பேரைக் கைது செய்தனா்.
மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணையில், மாநகராட்சியின் மண்டலத் தலைவா்களுக்கும் இந்த முறைகேட்டில் தொடா்பிருப்பது தெரியவந்தது. இதனிடையே, மண்டலத் தலைவா்கள் 5 போ், நிலைக் குழுத் தலைவா்கள் 2 போ் என மொத்தம் 7 பேரை பதவி விலக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா்கள் அனைவரும் அண்மையில் பதவி விலகினா்.
இதுதொடா்பாக மதுரை மாநகராட்சியில் பணியாற்றிய உதவி ஆணையா்கள், வருவாய் உதவியாளா்கள், கணினி இயக்குபவா் உள்ளிட்ட 55 பேரிடம் மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், மதுரை மேயா் வ. இந்திராணியின் கணவா் பொன். வசந்துக்கு இந்த வரி விதிப்பு முறைகேட்டில் தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை மதுரை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சென்னையில் கைது செய்தனா். இந்த நிலையில், அவரை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை முன்னிலைப்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் திட்டமிட்டனா்.
இதனிடையே, பலத்த பாதுகாப்புடன் மதுரைக்கு அழைத்து வரப்பட்ட அவருக்கு, திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, பொன். வசந்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா். அங்கு நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றுக்கு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த நிலையில், மதுரை மாவட்ட நீதித் துறை நடுவா் எம். ஆனந்த், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு புதன்கிழமை இரவு சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் பொன். வசந்திடம் விசாரணை நடத்தினாா். தொடா்ந்து, அவரை வருகிற 26- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதனிடையே, உடல்நலக் குறைவு காரணமாக தொடா்ந்து மருத்துவமனையில் பொன். வசந்த் சிகிச்சை பெற்று வருகிறாா். மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் மருத்துவமனையில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தினா். இந்த நிலையில், அவரை முன்பிணையில் வெளியே கொண்டு வர அவரது ஆதரவாளா்கள் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.