ஆரணி நீா்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பொதுமக்கள் அதிகாரிகளுடன் ...
மகா கும்பமேளாவைக் கலக்கிய அழகு நட்சத்திரம் மோனலிசா!
துடிப்பான பார்வை, அலட்சியமான புன்னகை, பயமில்லாத பேச்சால் பார்ப்பவர்களைக் கவரும் அழகிய இளம்பெண் மோனி போஸ்லே, சமூக ஊடகத்தால், ஒரே நாளில் உலகம் அறியும் அழகியாக மாறியிருக்கிறார்.
மகா கும்பமேளாவுக்கு வந்து ஏராளமான ருத்ராட்ச மாலைகளையும், வண்ண மணிமாலைகளையும் விற்று ஏராளமான பணத்துடன் வீடு திரும்ப எண்ணி வந்த மோனி போஸ்லே, மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் அன்பையும் எடுத்துக்கொண்டு சில கசப்பான அனுபவங்களுடன் ஊர் திரும்பியிருக்கிறார்.
மகா கும்பமேளாவுக்கு வந்த அந்த இளம் பெண்ணின் அழகிய புகைப்படங்கள், சமூக ஊடகங்களில் பரவ அது முதலில் அவருக்குக் கொண்டாட்டத்தையும் பிறகு பெரும் திண்டாட்டத்தையும் ஏற்படுத்திவிட்டது. தொடர்ந்து மகா கும்பமேளாவில் இருக்க முடியாமல், அவர் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உலகின் மிகப் பெரிய ஆன்மிகத் திருவிழா என்று அறியப்படும் மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல்வேறு ஆன்மிகச் சிறப்புகளால் இந்த மகா கும்பமேளா மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த நாள்களில் கோடிக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜ் வந்து கங்கையில் புனித நீராடிச் செல்வது வழக்கம். சாதாரண மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சாதுக்களும் இங்கு வந்து புனித நீராடுவது வழக்கம்.
மகா கும்பமேளா என்றால் நாள்தோறும் பல தகவல்களும் புகைப்படங்களும் வெளியாகும். அந்த வகையில், இந்த முறை இந்தூரைச் சேர்ந்த மோனி போஸ்லே என்ற பெண் சமூக ஊடகங்கள் மூலம் வைரலாகியுள்ளார்.
16 வயதே ஆன மோனி போஸ்லே, சமூக ஊடகத்தில் மோனலிசா என்று அழைக்கப்படுகிறார். ஜனவரி 21 ஆம் தேதி தனது 16-வது பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார் இந்த காந்தக் கண் அழகி. பிறந்தநாள் விடியோவை இன்ஸ்டாகிராமில் 2 லட்சம் பேர் லைக் செய்திருக்கிறார்கள். அவர் தனது குடும்ப உறவினர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக ஆடிப் பாடி பிறந்த நாள் கேக்கை வெட்டிக் கொண்டாடுவது விடியோவில் இடம்பெற்றுள்ளது.
இவரது புகழால், மகாகும்பமேளா செல்லும் யூடியூபர்களும், செல்ஃபி பிரியர்களும், மோன லிசாவைத் தேடிக் கண்டுபிடித்து அவருடன் செல்ஃபி எடுக்கவும், விடியோ எடுக்கவும் அங்கு குவிந்துவிடுகிறார்கள்.
முதலில், இந்த விஷயங்கள் எல்லாம் மோன லிசாவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மிகவும் பிடித்திருந்தாலும், நாள்கள் செல்ல செல்ல அதுவே அவர்களுக்கு பிரச்னையாக மாறிவிட்டது.
மகா கும்ப மேளாவில் அழகிய மணி மாலைகளை விற்பனை செய்ய குடும்பத்தோடு வந்திருந்த மோனலிசாவின் பாதுகாப்புக்கும், அவர்களது மணி விற்பனைக்கும் இது மிகப்பெரிய இடையூறாக மாறிவிட்டது.
இளைஞர்கள் மோனலிசாவை துன்புறுத்தும் விடியோக்களையும் சிலர் தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இளைஞர்கள் சிலர் வலுக்கட்டாயமாக மோனலிசாவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முயலும் விடியோக்களும் அதில் இடம்பெற்றுள்ளன. அவர் மணி விற்றுக்கொண்டிருக்கும்போது, அவரை தனது விற்பனையை கவனிக்கவிடாமல், பலரும் அங்கு வந்து தங்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். இதனால், அவரால் வந்த வேலையைக் கவனிக்க முடியாமல் போய்விட்டது. அதிலும், அவரது தனியுரிமை மற்றும் மன நிம்மதியும் கெட்டுவிட்டது. கும்பமேளாவுக்கு, அப்பெண் எதற்காக குடும்பத்துடன் வந்திருக்கிறார் என்பதையே மற்றவர்கள் மறந்துவிட்டார்கள் எனவும், இதுதான் சமூக ஊடகத்தினால் ஏற்படும் சிக்கல் என்றும் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த விடியோக்களைப் பார்த்த பலரும், இவர் மணி விற்பனை நிறுத்திவிட்டு செல்ஃபி எடுக்க பணம் வசூலிக்க வேண்டும். ஒரு செல்ஃபி எடுக்க ரூ.1,000 கேட்க வேண்டும். தன்னை அனுமதியின்றி புகைப்படம் எடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என்று பதாகை வைக்க வேண்டும் என்றெல்லாம் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ஒரு பெண் அழகாக இருக்கிறார் என்பதால், அவரை இவ்வாறு துன்புறுத்துவதா என்றும் பலரும் கோபம் அடைந்துள்ளனர்.
அது மட்டுமல்ல, மோனி போஸ்லே தங்கியிருந்த கூடாரத்துக்குள் இரவு நேரத்தில் புகுந்த இளைஞர்கள் சிலர், அவருடன் புகைப்படம் எடுக்க முயல, இதற்கு அவர் மறுத்தும்கூட, வலுக்கட்டாயமாக புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். அவர்களது செல்ஃபோனில் இருந்த புகைப்படங்களை, மோனியின் சகோதரர் அழிக்க முற்பட, இந்த இளைஞர்கள் சகோதரரைத் தாக்கியிருக்கிறார்கள். இதனை மோனி போஸ்லே மிக வேதனையுடன் பகிர்ந்துகொள்ளும் விடியோவும் வெளியாகியிருக்கிறது.
இவரது அழகு சமூக ஊடகங்களில் வைரலாகி, இவர் புகழ்பெற்றாலும், அதுவே அவரது அன்றாட வருவாய்க்கு உலை வைத்துவிட்டது என்றே பலரும் கருதுகிறார்கள். எனினும் இந்த சமூக ஊடகம் மூலம் அவருக்கு வேறு சில சிறந்த வாய்ப்புகள் உருவாகலாம் என்றும் நம்பப்படுகிறது.
பழுப்பு நிறக் கண்கள்...
லம்பாடா எனும் இனத்தைச் சேர்ந்த இவர்கள் நாடோடிகளாக வாழ்பவர்கள். இவர்களின் பூர்வீகம் என்னவோ ஈரான் மற்றும் மத்திய ஆசியா. இவர்களுக்கு மரபணு ரீதியாகவே நம்ம ஊரில் சொல்லப்படும் பூனைக் கண்தான் இருக்கும். இவரது முகத்துக்கும், அலட்சியமான புன்னகைக்கும் அந்த வெளிர் கருப்பு நிற கண்கள் கூடுதல் அழகை சேர்க்கின்றன என்று சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாகும்ப மேளாவை விடியோ எடுக்கச் சென்ற ஒரு யூடியூபர் இவரைப் படம்பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட, அந்தப் புகைப்படம் சமூக ஊடகங்கள் முழுக்க பரவி, மகா கும்பமேளாவுக்குச் சென்றவர்கள் பலரும் அவரைத் தேடிக் கண்டுபிடித்து செல்ஃபி எடுத்துக் கொள்ளச் சென்றதால் அவருக்கு மிகப் பெரிய சிக்கலாகிவிட்டது.
மீண்டும் மிகப் பிரமாதமான ஏதாவதோர் இடத்தில் ஒருவேளை நாம் மோனலிசாவைச் சந்திக்க வாய்க்கலாம்!