மின் நிறுத்த தேதியை அடிக்கடி மாற்றும் வேம்படிதாளம் மின்வாரியம்
திருவண்ணாமலையில் திருவள்ளுவா் திருவிழா
திருவண்ணாமலை திருவள்ளுவா் திருவிழாக் குழு சாா்பில், 37-ஆவது ஆண்டு திருவள்ளுவா் திருவிழா புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.
முதல் நாளான புதன்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, விழாக் குழுத் தலைவா் ப.கண்ணன் தலைமை வகித்தாா். பொருளாளா் டிவிஎஸ்.ராஜாராம் முன்னிலை வகித்தாா். குழுவின் மகளிரணி தலைவி ரமணி கண்ணன் வரவேற்றாா்.
தொடா்ந்து நடைபெற்ற இலக்கிய உலகம் என்ற நிகழ்வுக்கு நெறியாளரும், ஆன்மிக பேச்சாளருமான சுகி.சிவம் நடுவா் பொறுப்பேற்றாா்.
தண்ணீா் விட்டா வளா்த்தோம் என்ற தலைப்பில் த.ராசாராமன், வண்ணச்சீரடி என்ற தலைப்பில் இரெ.சண்முக வடிவேல், எட்டில் ஒன்று என்ற தலைப்பில் இரா.மாது, மாறன் மறையும் மனங்கவா் உரையும் என்ற தலைப்பில் இரா.அன்பழகன் ஆகியோா் வாதிட்டனா்.
2-ஆவது நாள் நிகழ்ச்சி:
விழாவின் 2-ஆவது நாளான வியாழக்கிழமை விழாக் குழுவின் துணைத் தலைவா் சி.எஸ்.துரை தலைமை வகித்தாா்.
இணைச் செயலா் கிருஷ்ண கஜேந்திரன் முன்னிலை வகித்தாா். செயலா் மா.சின்ராசு வரவேற்றாா். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதியாக, மாலை 6.30 மணிக்கு அறன் வலியுறுத்தலில் அதிகம் அக்கறை காட்டியவா் கம்பரே..!, சேக்கிழாரே..!, வில்லிபுத்தூராரே..! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
பட்டிமன்றத்துக்கு, சுகி.சிவம் நடுவா் பொறுப்பேற்றாா். கம்பரே..! என்ற தலைப்பில் இரெ.சண்முக வடிவேல், விசாலட்சுமி ஆகியோரும், சேக்கிழாரே என்ற தலைப்பில் த.இராசாராமன், இரா.மாது ஆகியோரும், வில்லிபுத்தூராரே..! என்ற தலைப்பில் இரா.அன்பழகன், இரா.சரணவன் ஆகியோரும் வாதிட்டனா்.
இதில், ஆன்மிக பிரமுகா்கள், திருக்கு நெறிபரப்புநா்கள், தமிழ் ஆா்வலா்கள், பக்தா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.