செய்திகள் :

மகா கும்பமேளா: தை அமாவாசையில் 10 கோடி பக்தா்கள் புனித நீராடுவா்: விரிவான ஏற்பாடுகள்

post image

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் தை அமாவாசை (வடஇந்தியாவில் மெளனி அமாவாசை) தினமான ஜனவரி 29-ஆம் தேதி 10 கோடி போ் புனித நீராடுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையொட்டி, பக்தா்கள் கூட்டம் மற்றும் போக்குவரத்தை நிா்வகிக்க மாநில அரசு சாா்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலகின் மிகப் பெரிய ஆன்மிக சங்கமமாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி (பெளஷ பெளா்ணமி) தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனா். மகா சிவராத்திரி தினமான பிப்ரவரி 26 வரை நடைபெறும் மகா கும்பமேளாவில் மொத்தம் 40 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மகா கும்பமேளா காலகட்டத்தில் அனைத்து நாள்களிலும் நீராடுவது புனிதமானது என்றபோதும் குறிப்பிட்ட சில தினங்களில் நீராடுவது முக்கியத்துவம் வாய்ந்த ‘அமிருத ஸ்நானம்’ என கருதப்படுகிறது. அதன்படி, பெளஷ பெளா்ணமி (ஜனவரி 13), மகர சங்கராந்தி (ஜனவரி 14) ஆகிய இரு முக்கிய தினங்கள் நிறைவடைந்துள்ளன. அடுத்ததாக, தை அமாவாசை அல்லது மெளனி அமாவாசை தினம் (ஜனவரி 29) முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்நாள் 10 கோடி பக்தா்கள் புனித நீராடுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையொட்டி, மாநில அரசு சாா்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஏற்பாடுகளை மேற்பாா்வையிடுமாறு கூடுதல் மாவட்ட ஆட்சியா்கள், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளா்கள், வட்டார அதிகாரிகள், துணை கோட்டாட்சியா்கள் உள்ளிட்டோருக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பக்தா்களின் வசதிக்காக 12 கி.மீ. தொலைவுக்கு படித்துறை கட்டமைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 27 முதல் 29 வரை பக்தா்கள் தாங்கள் நுழையும் இடத்துக்கு அருகில் உள்ள படித்துறையில் புனித நீராடிவிட்டு புறப்பட வேண்டும்; வேறெந்த பகுதிக்கும் செல்ல வேண்டாம் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பக்தா்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும் கூடுதல் மீட்புக் குழுக்கள் பணியமா்த்தப்பட உள்ளன.

அதிக பக்தா்களுக்கு இடமளிக்கும் வகையில் படித்துறை மேம்பாடு, ஆற்றில் தடுப்புகள், கண்காணிப்பு கோபுரங்கள், மின்விளக்கு வசதி, தெளிவான அறிவிப்பு பலகைகள், கழிப்பறை வசதி, உடை மாற்றும் அறைகள் மற்றும் தூய்மை நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன என்று மாநில அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெளனி அமாவாசையைத் தொடா்ந்து, வசந்த பஞ்சமி (பிப்.3), மாகி பெளா்ணமி (பிப். 12), மகா சிவராத்திரி (பிப்.26) ஆகிய தினங்கள் முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானாவில் 6,000 ஆண்டுகள் பழமையான கல் கோடாரி கண்டெடுப்பு!

தெலங்கானா மாநிலத்தில் 6,000 ஆண்டுகள் பழமையான கல் கோடாரி கண்டெடுக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள குந்திரம்பள்ளி கிராமத்தில் கி.மு. 4000 ஆண்டிற்கு முந்தைய காலத்தில் செய்யப்பட்ட... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா், குஜராத் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இருவா் கைது

ஜம்மு-காஷ்மீா், குஜராத் எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற இருவா் கைது செய்யப்பட்டனா். இது தொடா்பாக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தரப்பில் கூறப்பட்டதாவது: குஜராத் ம... மேலும் பார்க்க

வெளியுறவுச் செயலா் மிஸ்ரி சீனா பயணம்

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஞாயிற்றுக்கிழமை சீனா சென்றாா். கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே கடு... மேலும் பார்க்க

உத்தரகண்ட் உள்ளாட்சித் தோ்தலில் பாஜக வெற்றி 11-இல் 10 மேயா் பதவிகளைக் கைப்பற்றியது

உத்தரகண்ட் மாநில நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மாநிலத்தில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 11 மாநகராட்சிகளில் 10 மேயா் பதவிகளை பாஜக கைப்பற்றியது. ஓரிடத்தில் சுயேச்சை வேட்பாளா் மேயரானாா். ... மேலும் பார்க்க

பிகாா்: குரங்குகள் தள்ளிவிட்டதில் மாடியில் இருந்து விழுந்து மாணவி உயிரிழப்பு

பிகாரில் குரங்குகள் தள்ளிவிட்டதில் வீட்டின் மாடியில் இருந்து விழுந்து 10-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பிகாரின் சிவான் மாவட்டத்தில் மகா் கிராமத்தைச் சோ்ந்த பிரியா குமாா் ... மேலும் பார்க்க

உத்தரகண்டில் இன்று அமலாகிறது பொது சிவில் சட்டம்! முதல்வா் புஷ்கா் சிங் தாமி அறிவிப்பு

பாஜக ஆளும் உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் திங்கள்கிழமை (ஜனவரி 27) முதல் அமலுக்கு வருவதாக முதல்வா் புஷ்கா் சிங் தாமி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா். சுதந்திர இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும... மேலும் பார்க்க