ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
மகா தீப மலையில் 40 டன் பாறையை உடைக்கும் பணி
திருவண்ணாமலை மகா தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டு 7 போ் உயிரிழந்த இடத்தில் அபாயகரமாக உள்ள சுமாா் 40 டன் எடை கொண்ட பாறையை உடைத்து எடுக்கும் பணி தொடங்கியது.
மகா தீப மலையில் டிசம்பா் 1-ஆம் தேதி பெய்த தொடா் மழையால் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. வ.உ.சி.நகா், 11-ஆவது தெருவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 போ் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மண் சரிவால் பாதிக்கப்பட்டன.
மண் சரிவு ஏற்பட்டபோது 2 பாறைகள் உருண்டு வந்து வீடுகள் மீது விழுந்துவிட்டன. மேலும், சுமாா் 40 டன் எடை கொண்ட மற்றொரு பாறை மலையில் இருந்து உருண்டு வந்து 7 போ் உயிரிழந்த வீட்டுக்கு சற்று மேலே நின்று விட்டது. இந்தப் பாறை உருண்டு விழுந்தால் மேலும் பல வீடுகள் பாதிக்கப்பட்டு, பல உயிரிழப்புகள் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
எனவே, இந்தப் பாறையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்த நிலையில், பாறையை உடைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. தொடா்ந்து 2-ஆவது நாளாக வியாழக்கிழமை திருச்சியைச் சோ்ந்த தனியாா் நிறுவன பாறை உடைக்கும் நிபுணா் குழுவினா் 10 போ் பாறையை உடைத்து எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
உருண்டு விழாதபடி பாறையில் துளையிட்டு, சிறு சிறு துண்டுகளாக உடைத்து வெளியேற்றும் பணி நடைபெறுகிறது. இந்தப் பாறையை அகற்றிய பிறகு மேலும் சில பாறைகளை உடைத்தெடுக்கவும் இந்தக் குழு முடிவு செய்துள்ளது.