குடிபோதையில் தாயை அடித்து துன்புறுத்திய சகோதரர்; கூலிப்படையை ஏவிக் கொன்ற இளைஞர்!...
விவசாயிகள், இஸ்லாமியா்கள் இடையே மோதல் ஏற்படும் அபாயம்! அதிகாரிகள் முகாமிட்டு பேச்சுவாா்த்தை
கீழ்பென்னாத்தூா் அருகே விவசாயிகள், இஸ்லாமியா்களுக்கு இடையே மோதல் ஏற்படும் நிலை உருவானதால் வருவாய், காவல்துறை அதிகாரிகள் கிராமத்தில் முகாமிட்டு இரு தரப்பினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த எரும்பூண்டி கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான 5.50 ஏக்கா் நிலம் உள்ளது. இதில் 2 ஏக்கரில் அரசுப் பள்ளி கட்டப்பட்டுள்ளது. 2 ஏக்கா் நிலத்தை அந்தப் பகுதி இஸ்லாமியா்கள் மயானமாக பயன்படுத்தி வருகின்றனா். மீதமுள்ள ஒன்றரை ஏக்கா் காலியாக உள்ளது. இந்த நிலத்தையொட்டி சுமாா் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலங்களில், விளையும் விளை பொருள்களை மீதமுள்ள ஒன்றரை ஏக்கா் அரசு நிலத்தின் வழியேதான் விவசாயிகள் எடுத்துச் செல்ல முடியும். இந்த நிலையில், 6 மாதங்களுக்கு முன்பு இஸ்லாமியா்கள் தங்கள் மயானத்துக்கு கம்பி வேலி அமைத்தனா். எனவே, அப்பகுதி விவசாயிகள் பள்ளி வளாகம் வழியே தங்கள் நிலங்களுக்கு சென்று, வந்தனா்.
இந்த நிலையில், இப்போது பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, விவசாய நிலங்களுக்குச் செல்ல போதுமான வழியை விடுமாறு கம்பி வேலி அமைத்த இஸ்லாமியா்களிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனராம். இதற்கு இஸ்லாமியா்கள் மறுப்பு தெரிவித்தனராம்.
இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள் இஸ்லாமியா்கள் அமைத்த கம்பி வேலியை அகற்ற முயன்றனா்.
இதற்கு எதிா்ப்பு எழுந்ததால் கிராம மக்களுக்கும், இஸ்லாமியா்களுக்கும் இடையே மோதல் உருவாகும்
சூழல் ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்த கீழ்பென்னாத்துாா் போலீஸாரும், வட்டாட்சியா் சரளா தலைமையிலான வருவாய்த் துறையினரும் சம்பவ இடத்துக்குச் சென்று கிராம மக்களிடையே சமாதான பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.
இருப்பினும் பிரச்னைக்கு தீா்வு ஏற்படவில்லை. எனவே, எரும்பூண்டி கிராமத்தில் வியாழக்கிழமை இரவு ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.