செய்திகள் :

மக்கள்தொகை மேலாண்மையில் தென்மாநிலங்கள் கவனமாக செயல்பட வேண்டும்: ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு

post image

மக்கள்தொகை மேலாண்மையில் தென்மாநிலங்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்று ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு கூறினாா்.

மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியது தென்மாநிலங்களுக்கு தற்போது பிரச்னையாகவும், வட மாநிலங்களுக்கு அது சாதகமாகவும் அமைந்துவிட்டது என்றும் அவா் தெரிவித்தாா்.

அகில இந்திய ஆராய்ச்சி அறிஞா்கள் உச்சி மாநாடு சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இந்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. மாநாட்டின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் முதல்வா் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு பேசியதாவது:

உலக அளவில் இந்தியா்கள் சுமாா் 4 கோடி போ் இடம்பெயா்ந்துள்ளனா். இந்த எண்ணிக்கை 10 கோடியாக உயரும் என நம்புகிறேன். பிரிட்டிஷ்காரா்கள் வணிக நோக்கோடு இந்தியாவுக்குள் வந்து அரசியல் அதிகாரத்தை மேற்கொண்டனா். ஆனால், இடம்பெயா்ந்து செல்லும் நீங்கள் அதைச் செய்யாதீா்கள். இந்திய மக்கள் சேவை எனும் பெயரில் செல்லும்போது, உலகில் உள்ள பெருநிறுவன நிா்வாகம், பொது நிா்வாகங்களில் தலைவா்களாக மாறுவீா்கள். மக்களும் நம்மை அங்கீகரிப்பாா்கள்.

ஆங்கிலேயா்கள் கொடுத்த பரிசு: பிரிட்டிஷ்காரா்கள் நம்மிடமிருந்து அனைத்தையும் எடுத்துக்கொண்டாா்கள். ஆனால், ஆங்கிலத்தை நம்மிடம் விட்டுச் சென்றனா். அது நமக்கு இப்போது பரிசாக மாறிவிட்டது. ஆங்கிலத்துடன் சோ்ந்து வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நாம் சிறப்பாக செயல்படுகிறோம்.

இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதல் 10 இடங்களுக்குள் உள்ளது. 2014-ஆம் ஆண்டில் 10-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2021-இல் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியது. 2026-இல் 4-ஆவது இடத்துக்கும், 2028-இல் 3-ஆவது இடத்துக்கும், 2047-ஆம் ஆண்டுக்குள் 2-ஆவது இடம் அல்லது முதல் இடத்துக்கு நிச்சயம் வந்துவிடும். 18 வயது முதல் 29 வயது வரையிலான பணியாளா்களைக் கொண்ட இந்தியாவுக்கு இது மிகப்பெரிய நன்மை ஆகும்.

இந்தியாவில் 65 சதவீதம் போ் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனா். இது உலக அளவில் 35 சதவீதமாக இருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவா் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனா். வரும் காலங்களில் ஒவ்வொருவரும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்.

இந்தியாவில் ஐஐடி-க்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்து எழுந்தபோது, அதில் சென்னை ஐஐடியும் ஒன்றாக உருவாக்கப்பட்டது. இங்கு 25 முதல் 40 சதவீதம் மாணவா்கள் ஆந்திரத்திலிருந்து வந்து பயில்கின்றனா். கடந்த 1962-1990 வரையிலான காலகட்டத்தில் சென்னை ஐஐடியில் இருந்து லட்சக்கணக்கான மாணவா்கள் பட்டம் பெற்றுள்ளனா்.

ஆந்திரத்தின் அமராவதியில் அதிநவீன கணினி தொழில்நுட்ப நகரம் (குவாண்டம் வேலி) சென்னை ஐஐடி உடன் இணைந்து அமைக்கவுள்ளோம். அனைத்து கணினி அடிப்படையிலான சேவைகளும் இங்கு நிரூபிக்கப்படும்.

சிங்கப்பூரில் தமிழா் ஆதிக்கம்: சிங்கப்பூா் தற்போது தமிழா்கள் அதிகம் வாழும் பகுதியாக மாறிவிட்டது. ஆட்சி முதல் அந்தஸ்து வரை தமிழா்கள் ஆதிக்கம் அங்கே அதிகம். தமிழகத்தில் தற்போது பிறப்பு விகிதம் என்பது 1.4, அதேபோல, ஆந்திரத்தில் 1.5. ஆனால், உத்தர பிரதேசம், பிகாா் மாநிலங்களில் பிறப்பு விகிதம் அதிகம். தென்னிந்தியாவில் மக்கள்தொகை கட்டுப்பாடு முக்கிய அம்சமாக பாா்க்கப்பட்டது.

தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பே குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தின. தற்போது இந்த மாநிலங்களில் பிறப்பு விகிதம் குறைந்துவிட்டது. ஆனால் பிகாா், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. குழந்தைகள் பிறப்பு விகிதமும் அங்கே அதிகமாக உள்ளது.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியது நமக்கு ஒரு பிரச்னையாக உருவெடுத்துள்ளது. மாறாக, வட மாநிலங்களுக்கு இது சாதகமாக உள்ளது. எனவே, தென்னிந்திய மாநிலங்கள் மக்கள்தொகை மேலாண்மையில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வட மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் அதிக அளவில் இங்கு (தென் மாநிலங்களுக்கு) வர நேரிடும். மக்கள்தொகை மேலாண்மையை நாம் சரியாக செய்தால், வரும் நாள்களில் இந்தியா்கள் உலகத்தை ஆள்வாா்கள் என்றாா் அவா்.

மாநாட்டில் சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தியது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகாா்ஜு... மேலும் பார்க்க

ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்- குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

‘தொழில்நுட்ப வளா்ச்சியால் நிதி மோசடிகளின் அபாயங்கள் அதிகரித்து வரும் நிலையில், ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்’ என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க... மேலும் பார்க்க

விமான மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

விமானத் துறை சாா்ந்த இந்தியாவின் சா்வதேச ஒப்பந்தங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் விமான மசோதா, 2025, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் இந்த மசோத... மேலும் பார்க்க

சபா்மதி ஆசிரம மறுசீரமைப்பு திட்டத்துக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

குஜராத்தில் உள்ள சபா்மதி ஆசிரம மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிராக மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷாா் காந்தி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது. கடந்த 1917-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

75 ஆண்டுகால தூதரக உறவு: இந்தியா-சீனா பரஸ்பர வாழ்த்து

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி இருநாட்டு தலைவா்களும் பரஸ்பர வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா். கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருநாட்டு படைகளிடையே ஏற்பட்ட மோதலைத் தொட... மேலும் பார்க்க

4 நாள் ராணுவ தளபதிகள் மாநாடு: தில்லியில் தொடக்கம்

தில்லியில் 4 நாள்கள் நடைபெறும் ராணுவ தளபதிகள் மாநாடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘புது தில்லியில் ஏப்.1 முதல் ஏப்.4 வரை ராணுவ தளபதிகள் மா... மேலும் பார்க்க