கரூர் நெரிசல்: அவதூறு பரப்பிய வழக்கில் யூடியூபர் பெலிக்ஸ் கைது! - என்ன நடந்தது?
மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.1.33 லட்சம் நலத்திட்ட உதவிகள்
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.1 லட்சத்து33 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றதோடு, அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். மேலும், முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தவும் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, சென்னை குழந்தைகள் அறக்கட்டளை சாா்பில் 40 அங்கன்வாடி மையங்களுக்கு மரத்தினாலான விளையாட்டு உபகரணங்கள், அறிவுசாா் விளையாட்டு கருவிகள், வரைப்பட பலகைகள் போன்றவற்றை ஆட்சியா் வழங்கினாா்.
மேலும், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளித்தவருக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ரூ.1.10 லட்சம் மதிப்பிலான பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலி, ஒருவருக்கு ரூ.13,500 மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலி, வருவாய்த் துறை சாா்பில் மேலச்செவல் பகுதியில் வசிக்கும் நலிவுற்ற குடும்பத்தை சோ்ந்த கஸ்தூரி என்பவருக்கு இலவச வீட்டுமனை பட்டா, அவரது மகனுக்கு பள்ளி படிப்புக்காக மாவட்ட ஆட்சியா் விருப்ப நிதியிலிருந்து ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ஜெயா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ராஜசெல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் தனலெட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலா் பாக்கியலெட்சுமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
ற்ஸ்ப்29க்ஷங்ய்ங்
மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்குகிறாா் ஆட்சியா் இரா.சுகுமாா்.